மூன்றாண்டுகளில் இந்து சமய அறநிலையத்துறை செய்த சாதனை என்ன? முதல்வர் ஸ்டாலின் பேச்சு
பழனியின் சனிக்கிழமை (ஆகஸ்ட் 24) முதல் நடைபெறும் இரண்டு நாட்கள் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். காணொளி காட்சி மூலமாக இந்த மாநாட்டைத் தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின், கடந்த மூன்றாண்டு கால திமுக ஆட்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சகம் சார்பில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களை பட்டியலிட்டுப் பேசினார். கடந்த மூன்றாண்டு காலத்தில் 1,355 கோயில்களில் குடமுழுக்கு விழாக்கள் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த முதல்வர், ரூ,3,776 கோடியில் 8,436 கோயில்களில் திருப்பணிகள் செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். 50 கோடி ரூபாய் செலவில் கிராமப்புற ஆதிராவிடர் கோயில்களில் திருப்பணிகள் நடத்தியதைக் குறிப்பிட்ட முதல்வர், ரூ.62.76 கோடியில் 27 கோயில்களில் இராஜகோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
இந்து சமய அறநிலையத்துறையின் சாதனை குறித்த புத்தகம்
ரூ.80.50 கோடியில் பழனி இடும்பன்மலை, திருநீர்மலை, திருக்கழுக்குன்றம் கோயில்களில் ரோப்கார் வசதி அமைக்கப்பட்டதையும் குறிப்பிட்டார். ரூ.5,577 கோடி ரூபாய் மதிப்புடைய 6,140 ஏக்கர் கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டிருக்கிறது. 756 கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் செயல்பாட்டில் இருப்பதைக் குறிப்பிட்ட முதல்வர், அங்கு தினந்தோறும் 82,000 பேருக்கு உணவளிக்கப்பட்டு வருவதாகக் கூறினார். கடந்த மூன்றாண்டுகளில் 1.59 லட்சம் ஏக்கர் நிலங்கள் நவீன ரோவர் கருவிகள் மூலம் அளவீடு செய்யப்பட்டு 64, 522 கற்கள் நடப்பட்டுள்ளதாக கூறினார். மேலும். தான் சொன்னது மிகவும் குறைவு என்றும், திராவிட மாடல் அரசின் சாதனைகளை, இந்து சமய அறநிலையத்துறை மூலமாக ஒரு புத்தகமாகவே போடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.