பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான விடுதி கட்டிடங்களை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் தமிழகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாணவ மாணவியருக்கான ஐந்து விடுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 10) திறந்து வைத்தார். பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் கடலூர், தஞ்சாவூர், கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஓசூர், தூத்துக்குடி மாவட்டத்தின் கோவில்பட்டி மற்றும் மதுரை மாவட்டத்தின் மேலூரில், தலா 100 மாணவ மாணவியர் தங்குவதற்கான விடுதிகள் மொத்தம் 12.24 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டது. இதற்கான திறப்பு விழா சென்னை தலைமை செயலகத்தில் வியாழக்கிழமை நடந்த நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் நிகழ்ச்சியில் பங்கேற்று, காணொளி காட்சி மூலம் கட்டிடங்களை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.