மாடுபிடி வீரர்களுக்குக் கொண்டாட்டம்; இனி ஜல்லிக்கட்டில் வென்றால் அரசு வேலை; முதல்வர் ஸ்டாலினின் மாஸ் அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி சனிக்கிழமை (ஜனவரி 17) நடைபெற்றது. இந்தப் போட்டிகளை நேரில் கண்டு ரசிப்பதற்காகத் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அலங்காநல்லூர் வருகை தந்தார். வாடிவாசல் அருகே அமைக்கப்பட்டிருந்த விழா மேடையில் இருந்து காளைகளை வீரர்கள் அடக்குவதைப் பார்த்த முதல்வர், வெற்றி பெற்ற வீரர்களுக்கும் காளையின் உரிமையாளர்களுக்கும் தங்க மோதிரம் உள்ளிட்ட பரிசுகளை வழங்கிப் பாராட்டினார்.
அரசுப் பணி
மாடுபிடி வீரர்களுக்கு அரசுப் பணி
ஜல்லிக்கட்டு போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கையாக இருந்து வந்தது. இதனை நிறைவேற்றும் வகையில், அலங்காநல்லூர் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, பாரம்பரியமான ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்று அதிக காளைகளை அடக்கி வெற்றி பெறும் வீரர்களுக்கு, முன்னுரிமை அடிப்படையில் கால்நடை பராமரிப்புத் துறையில் அரசுப் பணி வழங்கப்படும் என்று அவர் அறிவித்தார்.
சிகிச்சை மையம்
ஜல்லிக்கட்டு காளைகளுக்கான சிறப்பு சிகிச்சை மையம்
வீரர்களுக்கான அறிவிப்பு மட்டுமின்றி, ஜல்லிக்கட்டு காளைகளுக்காக மற்றுமொரு முக்கிய அறிவிப்பையும் முதல்வர் வெளியிட்டார். அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கென பிரத்யேகமாக உயர்தர சிகிச்சை மற்றும் பயிற்சி மையம் ரூ.2 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். இதன் மூலம் காளைகளுக்குத் தேவையான மருத்துவ வசதிகள் மற்றும் பயிற்சிகள் நவீன முறையில் வழங்கப்படும்.
அடையாளம்
தமிழர்களின் அடையாளம் மற்றும் திராவிட மாடல்
விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "மதுரை மண் வீரம் விளைந்த மண். இந்த மண்ணில் அறிவு வளர்ச்சிக்காகக் கலைஞர் நூற்றாண்டு நூலகமும், வீர விளையாட்டுக்காகக் கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கமும் (கீழக்கரை) திராவிட மாடல் ஆட்சியில் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது" என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார். தமிழர்களின் அடையாளமான ஜல்லிக்கட்டுப் போட்டிகளை உலகத்தரம் வாய்ந்த முறையில் நடத்துவது அரசின் மிகப்பெரிய சாதனை என்றும் அவர் கூறினார்.