
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் நகர்ப்புற பள்ளிகளுக்கும் விரிவாக்கம்: முதல்வர் இன்று தொடங்கி வைத்தார்
செய்தி முன்னோட்டம்
மாநிலத்தில் மாணவர்களின் ஆரோக்கியத்தையும் கல்வி முன்னேற்றத்தையும் உறுதிப்படுத்தும் நோக்கில் செயல்படுத்தப்பட்டுள்ள முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், தற்போது நகர்ப்புற பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் 5வது கட்டத்துக்கான துவக்க விழாவை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை மயிலாப்பூரில் உள்ள புனித சூசையப்பர் தொடக்கப் பள்ளியில் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விவரம்
17.53 லட்சம் மாணவ-மாணவிகள் பயன்
தற்போது இந்த காலை உணவுத்திட்டம் மாநிலம் முழுவதும் 34,987 பள்ளிகளில் செயல்பட்டு வருகிறது. இதில் 17.53 லட்சம் மாணவ-மாணவிகள் பயனடைகின்றனர். இந்நிலையில், 2,430 நகர்ப்புற அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்காக திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. முதன்முறையாக இந்தியாவிலே காலை உணவுத் திட்டம் தொடங்கிய மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. தமிழ்நாட்டின் இந்த திட்டத்தை பின்பற்றி, தெலங்கானா உள்ளிட்ட பல மாநிலங்கள் காலை உணவு திட்டங்களை தொடங்கியுள்ளன. தற்போது வரை, 2.23 லட்சம் மாணவர்கள் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளில் திட்டத்தின் பயனாளர்களாக உள்ளனர்.