திரையரங்குகளில் இலவச குடிநீர் கட்டாயம்: உச்ச நீதிமன்றம்
வெளி உணவுகளை தடை செய்யும் உரிமை திரையரங்குகளுக்கு இருக்கிறது. ஆனால், சுகாதாரமான குடிநீர் இலவசமாக வழங்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதி பி.எஸ்.நரசிம்ஹா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. சமீபத்தில், ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்றம், "திரையரங்குகளுக்குள் வெளி உணவு பொருட்களை மக்கள் எடுத்த செல்லலாம், அதற்கு திரையரங்கு உரிமையாளர்கள் அனுமதிக்க வேண்டும்" என்று உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவிற்கு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
உச்ச நீதிமன்ற உத்தரவில் கூறி இருப்பதாவது:
திரையரங்கம் என்பது ஒருவரின் தனிப்பட்ட சொத்து. எனவே அதற்குள் எதை எடுத்து செல்ல கூடாது என்பதை சொல்வதற்கு உரிமையாளருக்கு உரிமை இருக்கிறது. பொது நலன் மற்றும் பாதுகாப்புக்கு தீங்கு விளைவிக்காத வரையில் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை விதிக்க உரிமையாளருக்கு உரிமை உண்டு. உணவு மற்றும் பானங்கள் விற்பனை செய்வதற்கு உரிமையாளருக்கு உரிமை உண்டு. திரைப்படம் பார்ப்பவர்களுக்கு அதை வாங்க பிடிக்கவில்லை என்றால் அது அவர்களது விருப்பம். ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவு திரையரங்கு உரிமையாளர்களின் நியாயமான உரிமையைப் பாதிக்கும். ஆனால், பச்சை குழந்தைகளுக்கு தேவையான உணவை பெற்றோர்கள் எடுத்துச் செல்ல திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்க கூடாது. மேலும், திரையரங்குகள் எந்தவித கட்டணமும் இன்றி சுகாதாரமான குடிநீரை பார்வையாளர்களுக்கு வழங்க வேண்டும்.