அருணாச்சல் பிரதேசத்தில் இருக்கும் 11 பகுதிகளுக்கு பெயரிட்ட சீனா
அருணாச்சல பிரதேசத்தின் மீதான தனது உரிமையை மீண்டும் வலியுறுத்தும் விதமாக, அருணாச்சலில் இருக்கும் 11 இடங்களுக்கு புதிய பெயர்களை சீனா வெளியிட்டுள்ளது. "திபெத்தின் தெற்குப் பகுதியான ஜங்னான்" என்று அருணாச்சலப் பிரதேசத்தை அழைக்கும் சீனா, அங்குள்ள இடங்களுக்கு மூன்றாவது முறையாக மறுபெயரிட்டிருக்கிறது. நேற்று(ஏப் 3) சீன, திபெத்திய மற்றும் பின்யின் எழுத்துக்களில் அந்த இடங்களின் பெயர்களை சீனாவின் சிவில் விவகார அமைச்சகம் வெளியிட்டது. சீனாவின் மாநில கவுன்சில் மற்றும் அமைச்சரவை வழங்கிய புவியியல் பெயர்கள் குறித்த விதிமுறைகளின்படி இந்த பெயர்கள் வெளியிடப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. சீனா வெளியிட்டுள்ள பெயர் பட்டியலில் ஐந்து மலைச் சிகரங்கள், இரண்டு நிலப் பகுதிகள், இரண்டு குடியிருப்புப் பகுதிகள் மற்றும் இரண்டு ஆறுகள் உள்ளன.
மூன்றாவது முறையாக பெயர்களை 'மாற்றும்' சீனா
இதுபோன்ற முதல் இரண்டு பட்டியல்கள் 2018 மற்றும் 2021 இல் வெளியிடப்பட்டன. சீனா 2017 இல் ஆறு பெயர்களின் பட்டியலை வெளியிட்டது. அதன் பின், 2021 இல் அருணாச்சல பிரதேசத்தில் இருக்கும் 15 இடங்களின் பெயர்களை சீனா மாற்றியது. புது டெல்லி இரண்டு சந்தர்ப்பங்களிலும் சீனாவின் கூற்றுக்களை கடுமையாக நிராகரித்தது. அருணாச்சல் மாநிலம் எப்போதும் இந்தியாவின் ஒரு பகுதியாக தான் இருந்தது , இனி எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த ஒரு பகுதியாக தான் இருக்கும் என்று இந்தியா தெரிவித்திருந்தது. "அருணாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள இடங்களின் பெயர்களை மாற்றுவதற்கு சீனா முயற்சிப்பது இது முதல் முறை அல்ல." என்று வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி டிசம்பர் 2021 இல் தெரிவித்தார்.