காஞ்சிபுரத்தில் குழந்தை தொழிலாளர்கள் அதிகரிப்பு
இந்தியாவில் உள்ள தமிழ்நாடு மாநிலத்தில் தொழிலாளர்கள் நலத்துறை சட்டங்களை பலர் மதிக்காமல் செயல்பட்டு வருகிறார்கள். குழந்தை தொழிலாளர்களை பலர் தற்போதும் பணியமர்த்தப்படும் கொடுமை நடந்துக்கொண்டு தான் உள்ளது. அதன்படி காஞ்சிபுரத்தில் கடந்த சில மாதங்களிலேயே 3 சம்பவங்களில் குழந்தைத்தொழிலாளர் விவகாரம் தெரியவந்துள்ளது. ஆட்சியர் அலுவலகம் அருகேயுள்ள பிரபல உணவகத்தில் வடமாநில தொழிலாளர்கள் 2பேர் மீட்கப்பட்டு காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுள் ஒருவர் 18வயதுக்குட்பட்டவர் என்பது தெரியவந்துள்ளது. இதனால் அந்த உணவக உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என தெரிகிறது. தொடர்ந்து காஞ்சிபுரம் காரை கிராமத்தில் மிக்ஸர்,சேவு செய்யும் கடையில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 17வயது சிறுவனும் அவனின் 12வயது தம்பியும் தனது பெற்றோர் வாங்கிய கடனை அடைக்க அந்த கடையில் பணி செய்துவந்தது தெரியவந்துள்ளது.
பல்வேறு இடங்களில் ரெய்டு நடத்த நடவடிக்கை
மேற்கூறப்பட்டுள்ள அந்த சம்பவம் குறித்தும் தற்போது தொழிலாளர் நலத்துறை விசாரணை நடந்து வருகிறது. மேலும் காஞ்சிபுர மாவட்டம் பாலுச்செட்டிசத்திரம் அருகே கோடீஸ்வரன் என்பவர் வீடு கட்டி வருகிறார். இந்நிலையில் நேற்று(ஏப்ரல்.,25) அங்கு போர்வெல் போட பணியாளர்கள் வந்துள்ளார்கள். அவர்களுள் சத்தீஸ்கர் மாநில சிறுவன் மேக்நாத்(15) என்பவனும் இருந்துள்ளான். இவன் வேலையின்போதே இரும்பு பைப் தலையில் விழுந்து அங்கேயே உயிரிழந்தான். இதன் மூலம் குழந்தை தொழிலாளர்கள் காஞ்சிபுரத்தில் அதிகம் இருப்பது அப்பட்டமாக தெரிகிறது. இதனால் தற்போது குழந்தை தொழிலாளர்களை மீட்டெடுக்க தொழிலாளர்கள் நலத்துறை பல்வேறு இடங்களில் ரெய்டுகள் நடத்த வேண்டும் என்னும் கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.