தமிழக முதல்வர் தனிப்பிரிவு அலுவலகத்தில் திடீர் ஆய்வு செய்தார் தலைமை செயலாளர் இறையன்பு
சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.தனிப்பிரிவு அலுவலகம் ஒன்று இயங்கிவருகிறது. இந்த அலுவலகத்தில் பல்வேறு புகார்கள் மற்றும் கோரிக்கைகளை அளிக்க தமிழ்நாடு முழுவதும் உள்ள பொதுமக்கள் வருவது வழக்கம். இந்நிலையில் முதல்வரின் தனிபிரிவில் எதிர்பாராவிதமாக திடிரென்று தலைமை செயலாளர் இறையன்பு இன்று(பிப்.,10) ஆய்வினை மேற்கொண்டுள்ளார். ஆய்வின்போது, அதிகாரிகள் சரியாக செய்கிறார்களா என்று கேட்டறிந்தார். மேலும் அவர் பெறப்படும் மனுக்கள் குறித்தும், அந்த மனுக்கள் மீதான நடவடிக்கைகள், புகார் மனுக்கள் குறிப்பிட்ட துறைகளுக்கு சரியாக அனுப்பப்படுகிறதா என்றும் கேள்விகளை எழுப்பியுள்ளார். தொடர்ந்து, புகாரளிக்க வரும் பொதுமக்களுக்கு எவ்வாறான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது என்றும் கேட்டறிந்தார். அதோடு புகார்கள் மீது எத்தனை நாட்களுக்குள் நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது என்றும் ஆய்வு செய்தார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
புதிதாக பொறுப்பேற்ற ஆட்சியர்களுக்கு கடிதம் எழுதிய தலைமை செயலாளர் இறையன்பு
இதனைதொடர்ந்து தலைமை செயலாளர் இறையன்பு அவர்கள் புதிதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார் என்று கூறப்படுகிறது. அந்த கடிதத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அவர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்ததோடு, கவனம் செலுத்தவேண்டிய 51 விஷயங்களையும் பதிவுசெய்துள்ளார். அதன்படி, மாவட்டத்தின் முக்கிய திட்டங்களை பட்டியலிட்டு அதன் முன்னேற்றம் எவ்வாறு உள்ளது என்பதை வாரந்தோறும் கண்காணிக்கவேண்டும். உழவர்கள் குறைத்தீர்க்கும் நாட்கள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. இதன் மூலம் கடைக்கோடி விவசாயி கூட ஆட்சியரை பார்த்து தனது குறையை எடுத்துரைக்க முடியும். முன்னாள் ராணுவத்தினர் மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியவர்கள். அவர்களுக்கான சிறப்பு குறைத்தீர் கூட்டங்கள் நடத்தப்பட்டு அவர்களது தேவைகளை பூர்த்தி செய்தல் போன்ற விஷயங்களை அவர் அந்த கடிதத்தில் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடவேண்டியவை.