புறவாசல் வழியாக அச்சுறுத்த விரும்பும் பாஜக அரசியல் செல்லாது - முதல்வர் மு.க.ஸ்டாலின்
கடந்த மாதம் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை செய்ததை தொடர்ந்து, இன்று(ஜூன்.,13) காலை சென்னையில் உள்ள அவரின் இல்லத்திலும், அவரின் சகோதரர் இல்லத்திலும் அமலாக்க துறை சோதனை செய்து வருகிறார்கள் என்று செய்திகள் வெளியானது. இதனை தொடர்ந்து, சென்னை தலைமை செயலகத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அறையில் முக்கிய ஆவணங்கள் ஏதேனும் கிடைக்கிறதா என்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டது. அவரது அலுவலக உதவியாளர் விஜயகுமாரை அழைத்து சென்றே அமலாக்கத்துறை அதிகாரிகள் இந்த சோதனையினை மேற்கொண்டுள்ளனர். மேலும், அமைச்சரின் அலுவலகத்திற்கு இந்தியன் வங்கி அதிகாரிகளையும் விசாரிக்க அழைத்து சென்றுள்ளனர் என்றும் கூறப்பட்டது.
தலைமை செயலகத்தின் மீது அமலாக்கத்துறை செய்யும் தாக்குதல் குறித்து அறிக்கை
இதனையடுத்து அரசியல் உள்நோக்கத்துடன் இந்த சோதனை செய்யப்படுவதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், "அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாத காரணத்தினால் புறவாசல் வழியே அச்சுறுத்த பார்க்கும் பாஜக அரசியல் என்றும் செல்லுபடியாகாது. அமலாக்கத்துறை செய்து வரும் சோதனைகளுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் தனது முழு ஒத்துழைப்பினை அளித்து வருகிறார். தலைமை செயலகத்தின் மீது அமலாக்கத்துறை செய்யும் தாக்குதல்கள் கூட்டாட்சி தத்துவத்திற்கே களங்கம் விளைவிக்கும் செயலாகும். ஒரு மாநில அரசின் மாண்பினை காக்கும் தலைமை செயலகத்திற்குள் மத்திய காவல் படையினரோடு வந்து அதிகாரிகள் சோதனை செய்வது தான் அரசியல் சட்ட மாண்பினை காப்பதா?" என்று தனது ஆதங்கத்தினை முதல்வர் வெளிப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.