டெல்லியில் மல்யுத்த வீராங்கனைகள் கைது - முதல்வர் ஸ்டாலின் கண்டனம்
இந்தியாவின் மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் மற்றும் பாஜக எம்பி.,யுமான பிரிஜ் பூஷன் சிங் பாலியல் புகாரில் சிக்கியுள்ளார். இவரை கைது செய்ய கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீராங்கனைகள் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இது குறித்து எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாத நிலையில் நேற்று(மே.,28) புதிய பாராளுமன்றத்தினை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த விழாவின் போது, 'மஹிளா மகாபஞ்சாயத்' என்னும் பெயரில் போராட்டம் நடத்த வேண்டும் என்று மல்யுத்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் முடிவெடுத்துள்ளனர். ஆனால், இதற்கு காவல்துறை அனுமதி தர மறுத்துள்ளது. எனினும் இவர்கள் காவல்துறை மறுப்பினை மீறி பாராளுமன்றம் நோக்கி பேரணியாக செல்ல முயற்சி செய்துள்ளார்கள் என்று செய்திகள் தெரிவிக்கிறது.
புதிய பாராளுமன்ற திறப்பு விழா போது போராட்டம் நடத்த முயற்சி
இதனால் அவர்களை போலீசார் கைது செய்ததையடுத்து, அப்பகுதியில் பெரும் பதற்றமான சூழல் ஏற்பட்டது. இந்த சம்பவத்திற்கு பல கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "பாஜக பாராளுமன்ற உறுப்பினர்மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகாரளித்து போராடி வரும் நிலையில் அந்த கட்சியின் தலைமை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை". "ஆனால் புதிய பாராளுமன்ற திறப்புவிழாவின் போது போராட்டத்தில் ஈடுபட்ட அவர்களை தூக்கியும், இழுத்து சென்றும் கைது செய்தது கண்டிக்கத்தக்கது". "இது செங்கோல் முதல்நாளே வளைந்துவிட்டது என்பதையே காட்டுகிறது". "குடியரசு தலைவர், அனைத்து எதிர்க்கட்சிகளின் புறக்கணிப்புகளையும் மீறி நடக்கும் இந்த விழாவில் அராஜகமும் அரங்கேறுவது தான் அறமா?" என்று பதிவு செய்துள்ளார்.