Page Loader
14 வயது சகோதரியை விபச்சாரம் செய்ய வற்புறுத்திய சென்னை பெண் கைது

14 வயது சகோதரியை விபச்சாரம் செய்ய வற்புறுத்திய சென்னை பெண் கைது

எழுதியவர் Sindhuja SM
Jul 28, 2024
05:25 pm

செய்தி முன்னோட்டம்

14 வயது சிறுமியை விபச்சாரம் செய்ய வற்புறுத்திய 6 பேரை கைது செய்த சென்னை காவல்துறை மேலும் இருவரை தடுத்து வைத்துள்ளது. போலீசாரால் கைது செய்யப்பட்டவர்களில் சிறுமியின் சகோதரியும் அடங்குவார். செம்மஞ்சேரியில் வசித்து வந்த அந்த சிறுமி, சமீபத்தில் படுவாஞ்சேரியில் உள்ள தனது சகோதரியின் புகுத்த வீட்டிற்கு குடிபெயர்ந்திருக்கிறார். இந்நிலையில், அந்த சிறுமியின் அக்காவும் அவரது மாமியாரும் சேர்ந்து அந்த சிறுமியை விபச்சாரத்தில் ஈடுபடுத்த முயற்சித்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதற்காக அவர்கள் அந்த சிறுமையை கே.கே.நகர், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அழைத்துச் சென்றதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

சென்னை 

6 பேரை போலீசார் கைது செய்தனர்

செங்கல்பட்டில் உள்ள குழந்தைகள் நலக் குழு மூலம் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சேலையூர் அனைத்து மகளிர் போலீஸார் தனிப்படை அமைத்து சிறுமியை மீட்டனர். விசாரணையின் அடிப்படையில், லட்சுமி, பிரகாஷ், தாமோதரன், கவிதா, கற்பகம் மற்றும் சீனிவாசன் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மேலும் இரு சந்தேகநபர்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது. இதே போல, கடந்த மே மாதம் பள்ளி மாணவிகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய ஏழு பேர் சென்னையில் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.