LOADING...
தமிழக தேர்தல்: சென்னையில் டோக்கன் பெற்றவர்கள் இரவு 8 மணி வரை வாக்களிக்கலாம்; குமரகுருபரன் ஐஏஎஸ் அறிவிப்பு
சென்னையில் டோக்கன் பெற்றவர்கள் இரவு 8 மணி வரை வாக்களிக்கலாம்

தமிழக தேர்தல்: சென்னையில் டோக்கன் பெற்றவர்கள் இரவு 8 மணி வரை வாக்களிக்கலாம்; குமரகுருபரன் ஐஏஎஸ் அறிவிப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Apr 23, 2026
07:01 pm

செய்தி முன்னோட்டம்

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்த நிலையில், வாக்குச்சாவடிக்குள் ஏற்கனவே நுழைந்து டோக்கன் பெற்ற வாக்காளர்கள் இரவு 8 மணி வரை வாக்களிக்கலாம் என்று சென்னை தேர்தல் நடத்தும் அலுவலர் குமரகுருபரன் ஐஏஎஸ் அறிவித்துள்ளார். மாலை 6 மணிக்குள் வாக்குச்சாவடிக்கு வந்தவர்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றுவதற்குத் தேர்தல் ஆணையம் இந்த வசதியைச் செய்துள்ளது. கூடுதல் விபரங்கள் இங்கே:-

தற்போதைய நிலவரம்

வாக்குப்பதிவு நிலவரம் மற்றும் விதிமுறைகள்

மாலை 5 மணி நிலவரப்படி தமிழகத்தில் 82.24 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. இது சுமார் 4.71 கோடிக்கும் அதிகமான வாக்காளர்களின் பங்கேற்பைக் குறிக்கிறது. மாலை 6 மணிக்குப் பிறகு வாக்குச்சாவடிகளின் கதவுகள் மூடப்பட்டு, உள்ளே வரிசையில் காத்திருந்தவர்களுக்கு மட்டுமே டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த டோக்கன்களை வைத்திருக்கும் வாக்காளர்கள் வரிசையில் காத்திருந்து தங்களின் வாக்குகளை இரவு 8 மணி வரை பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வரிசையில் இல்லாத பிற வாக்காளர்களுக்கு அனுமதி கிடையாது.

நேர நீட்டிப்பு

நேர நீட்டிப்பு குறித்த கோரிக்கைகள்

வாக்குப்பதிவு நேரத்தை மேலும் இரண்டு மணி நேரம் நீட்டிக்க வேண்டும் என்று தவெக தலைவர் விஜய் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தேர்தல் ஆணையத்திற்குக் கோரிக்கை விடுத்திருந்தனர். போக்குவரத்துச் சிக்கல்கள் மற்றும் வாக்காளர்களின் வருகையைக் கருத்தில் கொண்டு இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இருப்பினும், தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவு நேரத்தை முறைப்படி நீட்டிக்கவில்லை. அதற்குப் பதிலாக, மாலை 6 மணிக்கு முன்னதாக வரிசையில் நின்றவர்களுக்கு மட்டும் டோக்கன் வழங்கி, வாக்களிக்க அவகாசம் அளிக்கும் நடைமுறையைத் தேர்தல் ஆணையம் பின்பற்றியுள்ளது.

Advertisement

வாக்கு எண்ணிக்கை

வாக்கு எண்ணிக்கை குறித்த தகவல்கள்

வாக்குப்பதிவு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு, பாதுகாப்பான ஸ்ட்ராங் ரூம்களுக்குக் கொண்டு செல்லப்படுகின்றன. இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும், மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 62 வாக்கு எண்ணும் மையங்களில் எண்ணப்பட உள்ளன. இதற்கான அனைத்துப் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் உறுதி செய்துள்ளது. டோக்கன் பெற்றவர்கள் அமைதியான முறையில் வரிசையில் நின்று வாக்களித்துத் திரும்பும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Advertisement