இனி அதிக ஹாரன் எழுப்பினால் ரெட் சிக்னல் மாறாது; சென்னையில் வருகிறது புது திட்டம்
சென்னை, மதுரை, கோயம்புத்தூர் மற்றும் திருச்சி ஆகிய மில்லியன் பிளஸ் நகரங்களில் இரைச்சலை கட்டுப்படுத்தி சுற்றுப்புற காற்றின் தரத்தை மேம்படுத்துவதற்கான முன்முயற்சிகளின் ஒரு பகுதியாக, தமிழக அரசு சென்னையில் ஆய்வு நடத்த நிதி ஒதுக்கியுள்ளது. முதற்கட்டமாக சென்னையில் சென்சார் அடிப்படையிலான கண்காணிப்பு மூலம் ₹50 லட்சம் செலவில் இரைச்சல் மேப்பிங் ஆய்வு நடத்தப்படும். தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவரின் முன்மொழிவின் அடிப்படையில் இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மக்கள்தொகை இடம்பெயர்வு இந்த நகரங்களுக்குள் மக்கள் பெருக்கத்தின் விளைவாக வாகன போக்குவரத்து மற்றும் ஹாரன் பயன்பாடு அதிகரித்துள்ளது. கூடுதலாக, தொழில்துறை நடவடிக்கைகள், கட்டிட கட்டுமானம், இடிப்பு மற்றும் சாலைகள், பாலங்கள் மற்றும் வடிகால் அமைப்புகளை உள்ளடக்கிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் மேம்பாட்டுத் திட்டங்கள் அதிகரித்துள்ளன.
மும்பை காவல்துறையின் உத்தியை பின்பற்ற திட்டம்
ஹாரன் சத்தத்தைக் குறைப்பதற்காக மும்பை காவல்துறை பயன்படுத்தும் பனிஷிங் சிக்னல்கள் அமைப்பை சென்னையில் நடைமுறைப்படுத்தலாம் என விவாதிக்கப்பட்டு வருகிறது. இது நடைமுறைக்கு வந்தால், போக்குவரத்து சிக்னல்களில் பொருத்தப்பட்டிருக்கும் டெசிபல் மீட்டர்கள், சிக்னல் சிகப்பாக இருக்கும் போது அதிக ஹாரன் எழுப்பினால், சிக்னல் ரீசெட் ஆகி நீண்ட நேரம் சிவப்பாக இருக்கும். இதற்கிடையே, பொறுப்புடன் வாகனம் ஓட்டும் பழக்கம் மற்றும் சாலைப் பாதுகாப்பை ஊக்குவிக்கும் நோக்கில் 'ஜீரோ இஸ் குட்' பிரச்சாரத்தைத் தொடர்ந்து, ஹாரன் அடிப்பதைத் தடுக்க சென்னை போக்குவரத்துக் காவல்துறை திட்டமிட்டுள்ளது. மேலும், அதிக டெசிபல் ஹாரன்களைப் பயன்படுத்தும் வாகனங்கள்/ஓட்டுனர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.