தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர் பிரபஞ்சன் நீட் தேர்வில் முதலிடம் பிடித்து சாதனை
இந்தியா முழுவதும் இளநிலை மருத்துவ படிப்பின் சேர்க்கைக்கான 'நீட்' நுழைவு தேர்வு கடந்த மே மாதம் 7ம் தேதி நடந்தது. இந்த தேர்வினை 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதினர். 499 நகரங்களில் நடந்த இந்த தேர்வில் முறைகேடுகள் நடைபெறாமல் தடுப்பதற்காக பல்வேறு கண்காணிப்பு நடவடிக்கைகளை தேசியளவிலான தேர்வு முகமையானது எடுத்திருந்தது. தேர்வு எழுத வந்த மாணவர்கள் அனைவருமே பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே, தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். இந்த தேர்வினை தமிழ்நாடு மாநிலத்தில் இருந்து மட்டும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதிய நிலையில், 78,693 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளார்கள்.
முதல் முயற்சியிலேயே சாதனை படைத்த மாணவர்
அதனுள் தமிழகத்தை சேர்ந்த பிரபஞ்சன் என்னும் மாணவனும், ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த போரா வருண் சக்கரவர்த்தி என்னும் மாணவனும் இந்தியளவில் தேர்வில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்கள். இதனைத்தொடர்ந்து, தேர்வுப்பெற்ற முதல் 10 பேரின் வரிசையில், 4 தமிழக மாணவர்கள் இடம் பிடித்துள்ளார்கள் என்பது கூடுதல் சிறப்பு. விழுப்புரம் மாவட்டம், மேல்ஓலக்கூர் கிராமத்தினை சேர்ந்த பிரபஞ்சன், சென்னையில் உள்ள அவரது உறவினர் வீட்டில் இருந்து படித்து வந்துள்ளார் என்று கூறப்படுகிறது. இவரது பெற்றோர் செஞ்சியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியர் பணியில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. தனியார் பள்ளியில் பயின்ற இவர் 720க்கு 720 மதிப்பெண் எடுத்து தன்னுடைய முதல் முயற்சியிலேயே இந்த சாதனையினை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.