சென்னையில் 30 இடங்களில் வெடிகுண்டு வைத்துள்ளதாக மிரட்டல் - காவல்துறை தீவிர சோதனை
சென்னை மெரினா கடற்கரை அருகே காமராஜர் சாலையில் அமைந்துள்ள தமிழக காவல்துறை தலைமை இயக்குனர்(டிஜிபி) அலுவலகத்திற்கு நேற்று(டிச.,27) மாலை ஓர் மின்னஞ்சல் வந்துள்ளது. அந்த மின்னஞ்சலில் சென்னை முழுவதும் சுமார் 30 இடங்களில் வெடிகுண்டு வெடிக்கும் என்றும், அதில் முதல் குண்டு பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் தான் வெடிக்கவுள்ளது என்றும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. பெசன்ட் நகர் கடற்கரையில் 2500 கிலோ வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, வெடிகுண்டு வைத்திருக்கும் மீதி இடங்களின் விவரங்கள் குறித்து தெரிய வேண்டுமெனில் 2,500 பிட்காயின்களை தனக்கு அனுப்ப வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மோப்ப நாய்கள் மற்றும் வெடிகுண்டு டிடக்டர்கள் கொண்டு சோதனை
இந்த மின்னஞ்சலை சாதாரணமாக கருத வேண்டாம் என்றும், பிட்காயின்கள் கொடுக்கப்படாவிட்டால் நிச்சயம் சென்னையில் குண்டுவெடிப்பு நடக்கும் என்றும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த நபரின் பெயர் செந்தில் என்று அந்த மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டிருந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இந்த மின்னஞ்சலை கண்டு அதிர்ந்த டிஜிபி அலுவலக காவலர்கள் தங்கள் உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்படி வெடிகுண்டு நிபுணர்கள் உடனடியாக மோப்ப நாய்கள் மற்றும் வெடிகுண்டு டிடக்டர்களோடு எலியட்ஸ் கடற்கரை முழுவதும் சோதனை செய்துள்ளனர். இந்த சோதனையில் எவ்வித வெடிகுண்டும் கிடைக்கவில்லை.
வதந்தியை பரப்பிய நபர் யார்? என கண்டறியும் பணியில் சைபர் கிரைம் ஈடுபாடு
இந்நிலையில் சென்னை முழுவதும் மக்கள் அதிகம் கூடும் முக்கிய இடங்களில் சோதனை மேற்கொள்ள ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தலைமையில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இதுமட்டுமில்லாமல் அனைத்து காவல் நிலையத்திற்கும் இதுகுறித்து தெரிவித்து உஷார் நிலையில் இருக்குமாறு உத்தரவிடப்பட்டது. காவல்துறை கண்காணிப்புகள் அதிகரிக்கப்பட்டதோடு, வாகன சோதனைகளும் தீவிரப்படுத்தப்பட்டது. இதன் காரணமாக நேற்று இரவு முழுவதும் சென்னையில் பெரும் பரபரப்பான சூழல் நிலவியது. இதனை தொடர்ந்து தற்போது இந்த வதந்தியை பரப்பிய நபர் யார்? என்று கண்டறியும் பணியில் சைபர் கிரைம் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.