LOADING...
சென்னைக்கு ஆரஞ்சு அலெர்ட்; கனமழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
சென்னைக்கு ஆரஞ்சு அலெர்ட்

சென்னைக்கு ஆரஞ்சு அலெர்ட்; கனமழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

எழுதியவர் Sekar Chinnappan
Oct 19, 2025
02:35 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் கனமழை நீடித்து வரும் நிலையில், வானிலை ஆய்வு மையம் புதிய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி வரும் அக்டோபர் 21ஆம் தேதி வங்கக்கடலிலும், அரபிக்கடலிலும் தலா ஒரு புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இவை மேலும் வலுவடைந்து தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் என்பதால், ஒரே நேரத்தில் இரண்டு புயல்கள் உருவாகும் சாத்தியம் ஏற்பட்டுள்ளது. இந்த வானிலை மாற்றத்தால், தலைநகர் சென்னைக்குக் குறிப்பாக ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதே நாட்களில் புதுவையிலும் கனமழை பெய்யக்கூடும்.

மூன்று நாட்கள்

மூன்று நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

இதற்கு முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 19) நீலகிரி, கோயம்புத்தூர் மலைப்பகுதிகள், ஈரோடு, திருப்பூர் தேனி மற்றும் தென் மாவட்டங்களில் கனமழை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அக்டோபர் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களிலும், உட்புற மாவட்டங்களிலும் மிதமான மழை நீடிக்கும். ஒட்டுமொத்தமாக, ஒரு வாரத்திற்குத் தமிழ்நாட்டில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதால், தாழ்வான பகுதிகளில் வசிப்போர் மற்றும் கடலோர மக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். கூடுதலாக, அக்டோபர் 24 அன்று நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், திண்டுக்கல், தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது.