நெல்லை-சென்னை வந்தே பாரத் ரயில்: 24ஆம் தேதி துவக்கி வைக்கிறார் பிரதமர்
இந்திய நாட்டின் வந்தே பாரத் ரயில் சேவையானது கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரியில் டெல்லி-வாரணாசி இடையே பிரதமர் மோடி அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது. இந்த ரயிலின் அதிவேகம், குளிர்சாதன வசதி, போன்ற சேவைகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றுக்கொடுத்தது. இதனால் நாடு முழுவதும் இந்த ரயில் சேவையினை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்து அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் இம்மாதம் 24ம் தேதியன்று இந்தியா முழுவதும் 9 'வந்தே பாரத்' ரயில்களின் சேவைகளை பிரதாமர் மோடி காணொளி காட்சி மூலம் துவக்கி வைக்கவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. அதனுள் நெல்லை-சென்னை, சென்னை-விஜயவாடா, காசர்கோடு-திருவனந்தபுரம் உள்ளிட்ட 3 வந்தே பாரத் ரயில்கள் தென்னக ரயில்வே கோட்டத்திற்கானது என்பது குறிப்பிடவேண்டியவை.
தென்னக ரயில்வே மேலாளரான பத்மநாபன் ஆனந்த் நேரில் ஆய்வு
அதன்படி நெல்லை-சென்னை வந்தே பாரத் ரயில் சேவை நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் துவங்கவுள்ளது. தற்போது அதற்கான முன்னேற்பாடுகளை தென்னக ரயில்வே மேலாளரான பத்மநாபன் ஆனந்த் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசுகையில், "பிரதமர் மோடி 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் இந்த ரயில்களின் சேவைகளை துவக்கி வைக்கவுள்ளார். இந்த வந்தே பாரத் ரயில் நெல்லையில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு சென்னைக்கு மதியம் 1.50க்கு சென்னை எழும்பூர் வந்தடையும்" என்று தெரிவித்துள்ளார். மேலும், நெல்லையில் இருந்து சேவை துவங்கவுள்ளதால், சென்னையில் இருந்து அந்த ரயில்களை கொண்டு செல்ல தொழில்நுட்ப குழு இன்று(செப்.,20)சென்னைக்கு வரவுள்ளது. நாளை(செப்.,21) இந்த ரயில்கள் நெல்லைக்கு கொண்டு சேர்க்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.