சென்னையில் இனி 2 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில்
சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் 118.9 கிலோ மீட்டர் நீளத்திற்கு 128 ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு மத்தியில் சென்னையில் மெட்ரோ ரயிலினை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன்படி, தற்போது நாள் ஒன்றுக்கு சராசரியாக 2.5 லட்சம் பேர் வரை மெட்ரோவில் பயணம் செய்வதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இந்நிலையில், இனிமேல் சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்டத்தில் 2 நிமிடங்களுக்கு ஒரு ரயில் என்னும் அடிப்படையில் ரயில் சேவையினை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அடுத்தகட்டமாக 138 ஓட்டுநர் இல்லா ரயில்கள் இயக்கப்படும்
முன்னதாக சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் துவங்கியபோது 4 முதல் 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்களை இயக்கவே திட்டமிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. எனினும், ரயில் பயணிகள் வருகை அதிகரித்துள்ளதால் ரயில் சேவைகளையும் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து, அடுத்தகட்டமாக 138 ஓட்டுநர் இல்லா ரயில்கள் இயக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதே போல் ரயில் பெட்டிகள் எண்ணிக்கையும் அதிகரிப்பது குறித்தும் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. 2ம் கட்ட மெட்ரோ ரயில்கள் மாதவரம்-சிறுசேரி, மாதவரம்-சோழிங்கநல்லூர், பூந்தமல்லி-விவேகானந்தர் இல்லம் என 3 வழித்தடங்களில் அமைக்க பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.