சென்னை மாநகராட்சி பட்ஜெட்-2023ன் முக்கிய அம்சங்கள் ஓர் பார்வை
சென்னை மாநகராட்சி பட்ஜெட் 2023-24ம்நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டினை மேயர் பிரியாராஜன் இன்று(மார்ச்.,27)தாக்கல் செய்தார். அதன்படி சென்னையில் 12 துறைகளுக்கு ரூ.3500கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதுகுறித்த விவரங்கள் வருமாறு, மாநகராட்சி பள்ளி கட்டிடங்களை சீரமைக்க மற்றும் புதிதாக மாநகராட்சியோடு இணைக்கப்பட்ட 139 பள்ளிகளை சீரமைக்க ரூ.45 கோடி ஒதுக்கீடு. மாநகராட்சி பள்ளிகளில் படித்து தேசிய கல்விநிறுவனங்களில் சேரும் மாணவர்களின் 1ம்ஆண்டு கல்வி கட்டணத்தினை மாநகராட்சி ஏற்கும் என்று அறிவிப்பு. நோய்நிலைகளை மதிப்பிட தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையில் கண்காணிப்பு பிரிவு அமைத்தல். சிங்காரச்சென்னை 2.0 திட்டத்தின்கீழ் 452 பேருந்துவழித்தட சாலைகள் மற்றும் உட்புறச்சாலைகள் 78.01 கிமீ., நீளத்திற்கு ரூ.55.61 கோடி மதிப்பில் சீரமைக்கப்படும். சாலையோரத்திலுள்ள கட்டடக்கழிவுகளை அகற்ற ஒவ்வொரு மண்டலத்திற்கும் ரூ.1.20கோடி மதிக்கத்தக்க வாகனம் அளிக்கப்படும்.
மழைநீர் வடிகால்கள் ரூ.55 கோடி மதிப்பில் தூர்வாரும் பணி
தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ.149.55 கோடி மதிப்பில் 251.11 கிமீ.,நீளத்திற்கு 1,335பேருந்து மற்றும் உட்புற சாலைகள் மேம்படுத்தப்படும். உலகவங்கி நிதியுதவி மூலம் ரூ.1000கோடி மதிப்பில் கொசஸ்தலை ஆறு வடிநிலை ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் அமைக்கப்படும். சென்னையின் முக்கிய பகுதிகளில் ரூ.232கோடி செலவில் மழைநீர் வடிகால்பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும் மாநகராட்சியின் மழைநீர் வடிகால்கள் ரூ.55கோடி மதிப்பில் தூர்வாரும் பணி மேற்கொள்ளல். 25 விளையாட்டு திடல்களில் ரூ.5 கோடி மதிப்பில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். தமிழக நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின்கீழ் 2 பண்ணை அமைக்கப்படுவதோடு, 2.50 லட்ச மரக்கன்றுகள் நடப்படும். சென்னை அண்ணாசாலையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 6.26 கோடி மதிப்பில் மாதிரி பள்ளிக்கட்டிடம் கட்டும்பணி நடைபெறும் என பல அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.