
போத்தீஸ் நிறுவனத்தின் 20க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை
செய்தி முன்னோட்டம்
சென்னை தியாகராய நகரில் உள்ள பிரபல ஜவுளி நிறுவனமான போத்தீஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான இடங்களில் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 12) வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். மூன்று கார்களில் வந்த 12 க்கும் மேற்பட்ட அதிகாரிகள், நிறுவனத்தின் பல்வேறு கிளைகள் மற்றும் அதன் உரிமையாளர் வீடுகளில் சோதனையில் ஈடுபட்டதால், அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. போத்தீஸ் நிறுவனத்தின் வரி ஏய்ப்பு குறித்த புகார்களின் அடிப்படையில் இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தியாகராய நகரில் உள்ள போத்தீஸ் கடை, அபிராமபுரத்தில் உள்ள உரிமையாளர் ரமேஷ் வீடு மற்றும் நீலாங்கரையில் உள்ள அவரது மகன்கள் அசோக், போத் ராஜா ஆகியோரின் வீடுகளிலும் சோதனை நடந்து வருகிறது.
குரோம்பேட்டை
குரோம்பேட்டையிலும் சோதனை
இது தவிர, குரோம்பேட்டையில் உள்ள போத்தீஸ் ஸ்வர்ண மஹால் மற்றும் துணிக்கடையிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. பொதுவாக, இதுபோன்ற சோதனைகளுக்கு காவல்துறையின் பாதுகாப்புடன் அதிகாரிகள் வருவது வழக்கமாக இருக்கும் நிலையில், தற்போது எந்தவித பாதுகாப்புமில்லாமல், அதிகாரிகள் சோதனை நடத்தி வருவது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் 20 க்கும் மேற்பட்ட இடங்களில், 40 க்கும் அதிகமான கார்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தத் திடீர் சோதனைகள், தமிழகத்தின் முக்கிய ஜவுளி வர்த்தக நிறுவனங்களில் ஒன்றுக்கு எதிராக நடத்தப்படுவதால், ஜவுளி வர்த்தக வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.