கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலைக்கு ரூ.1 கோடி செலவில் புனரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டு நிறைவு
கன்னியாகுமரியில் கடல் நடுவில் இருந்த பாறையில் 133 அடி உயர சிலை எழுப்பப்பட்டு கடந்த 2000ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி அப்போது ஆட்சியில் இருந்த முதல்வர் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது. இச்சிலையை காண ஆயிரக்கணக்கான வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றலாப்பயணிகள் படகில் பயணம் செய்து கண்டு வருவார்கள். இந்த சிலை உப்புக்காற்றினால் பாதிக்கப்படாமல் இருக்க நான்கு ஆண்டிற்கு ஒரு முறை இதனை பழுது பார்த்து ரசாயன கலவையை சிலை மேல் பூசுவது வழக்கம். 2017ம் ஆண்டு கடைசியாக ரசாயனம் பூசப்பட்டது, கடந்தாண்டு இப்பணி நடக்க ஏற்பாடு செய்த நிலையில், கொரோனா பரவலால் இது தடைப்பட்டது. இந்நிலையில் தற்போது இந்தாண்டு ரூ.1 கோடி செலவில் இப்பணியானது மேற்கொள்ளப்பட்டு நிறைவு பெற்றுள்ளது.
சிலையில் ஏற்பட்ட வெடிப்புகள் மீது கலவை பூசப்பட்டு, படிந்துள்ள உப்பினை சுத்தம் செய்ய காகிதக் கூழ் ஒட்டப்பட்டது
இப்பணியில் முதற்கட்டமாக சிலையை சுற்றி இரும்பு பைப்புகள் கொண்டு சாரங்கள் அமைக்கப்பட்டு, சிலை முழுவதும் தண்ணீரால் சுத்தம் செய்யப்பட்டது. அதன்பின், சுண்ணாம்பு, கடுக்காய், பனை வெல்லம் உள்ளிட்ட கலவை கொண்டு சிலையில் ஏற்பட்டுள்ள வெடிப்புகள் மீது பூசப்பட்டது. இதனையடுத்து சிலையில் படிந்துள்ள உப்பினை சுத்தம் செய்ய காகிதக் கூழ் ஒட்டப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது. இதன் பின்னர் சிலை மீது ரசாயனம் பூசும் பணி செய்து முடிக்கப்பட்டுள்ளது, தற்போது 145 அடி உயர துக்கு அமைக்கப்பட்டு கட்டப்பட்டிருந்த இரும்பு சாரங்களை பிரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இன்னும் சிலநாட்களில் சாரங்களை பிரிக்கும் பணி நிறைவடையும் பட்சத்தில், பொங்கல் பண்டிகை முதல் சுற்றுலாப்பயணிகளுக்கு படகில் சென்று சிலையை காண அனுமதி அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.