செம்பரப்பாக்கம் ஏரியிலிருந்து கூடுதல் தண்ணீர் திறப்பு - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கி தற்போது தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் தொடர் மழை பெய்து வருவதால் நீர்நிலைகளின் நீர்மட்டம் அதிகரித்து வருவதாக செய்திகள் வெளியாகி வருகிறது. அதன்படி சென்னையிலுள்ள முக்கிய அணைகளின் நீர்மட்டமும் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், அதனை கண்காணிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் 24 அடி உயரம் கொண்ட சென்னை செம்பரப்பாக்கம் ஏரியில் நீர்மட்டம் 23 அடியினை நெருங்குவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அணையில் இருந்து இன்று(நவ.,28) 200 கன அடி உபரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தற்போது திருநீர்மலை, அடையாறு, திருமுடிவாக்கம், குன்றத்தூர், சிறுகளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
மேலும், ஏரிக்கு வரும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தால் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து கூடுதலான உபரி நீர் திறக்கவும் வாய்ப்புள்ளது என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். முன்னதாக ஏரியில் இருந்து வினாடிக்கு 25 கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அது 200 கனஅடியாக உயர்ந்துள்ளது என்று செய்திகள் தெரிவிக்கிறது. தொடர்ந்து, செம்பரப்பாக்கம் ஏரிக்கு வந்து கொண்டிருந்த நீர் வரத்து வினாடிக்கு 532 கன அடியில் இருந்து 452 கன அடியாக குறைந்துள்ளது என்றும் தகவல்கள் கூறுகிறது. இதனிடையே, 3,645 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட இந்த ஏரியில் தற்போதைய நீர் இருப்பு 3,195 மில்லியன் கன அடி என்றும் கூறப்படுகிறது.