
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
செய்தி முன்னோட்டம்
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அதிமுக கட்சியினை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர் மீதும், கே.பி.அன்பழகன் மீதும் லஞ்சஒழிப்புத்துறை இன்று(மே.,22)குற்றப்பத்திரிகையினை தாக்கல் செய்துள்ளது.
தமிழ்நாடு மாநிலத்தில் 2016-2021ம் ஆண்டு வரை நடந்த அதிமுக ஆட்சியில் உயர்கல்வித்துறை அமைச்சராக கே.பி.அன்பழகன் பதவிவகித்தார்.
அப்போது அவர் தனது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை மேற்கொள்ளவேண்டும் என்றும் கிருஷ்ணமூர்த்தி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்தார்.
இதன்படி தருமபுரி லஞ்சஒழிப்புத்துறை கே.பி.அன்பழகன், அவரது மனைவி, 2 மகன்கள் மற்றும் மருமகள் என 5 பேர்மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
இந்த விசாரணையில் அன்பழகன் ரூ.45.20 கோடி சொத்து சேர்த்துள்ளதாக தெரியவந்துள்ளது.
எனினும் இதுகுறித்த குற்றப்பத்திரிக்கையினை லஞ்சஒழிப்புத்துறை தாக்கல் செய்யவில்லை.
லஞ்சம்
10 ஆயிரம் பக்கத்திலான குற்றப்பத்திரிக்கை தாக்கல்
பின்னர் மீண்டும் கிருஷ்ணமூர்த்தி இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததையடுத்து, விரைந்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி தற்போது தருமபுரி நீதிமன்றத்தில் 10 ஆயிரம் பக்கம் கொண்ட குற்றப்பத்திரிக்கையினை லஞ்சஒழிப்புத்துறை தாக்கல் செய்துள்ளது.
இதனை தொடர்ந்து, அதிமுக ஆட்சியின்போது, சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர் திருவள்ளூர் அருகே மஞ்சக்கரணையில் மருத்துவ கல்லூரி ஒன்றினை அமைக்க முறைகேடாக சான்றிதழ் வழங்கியதாக புகார்கள் எழுந்தது.
அதன்பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை அவரது வீடு மற்றும் அவர் சம்பந்தப்பட்ட இடங்களில் சோதனையினை மேற்கொண்டனர்.
அப்போது வருமானத்திற்கு அதிகமாக ரூ.35.79கோடி சொத்து வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில் விஜயபாஸ்கர் மீது புதுக்கோட்டை நீதிமன்றத்தில் 216 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகையினை லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.