மகனை கொன்ற பெங்களூரு CEO வழக்கில் கோவா போலீசாரின் இறுதி குற்ற அறிக்கை வெளியானது
செய்தி முன்னோட்டம்
மகனை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட 39 வயதான சுசனா சேத்திற்கு எதிரான கோவா போலீசாரின் இறுதி குற்றப்பத்திரிகை தற்போது வெளியாகியுள்ளது.
சுசனா, தனது மகனின் சடலத்தை ஒரு பையில் மறைத்துக்கொண்டு பயணித்தபோது காவல்துறையினரால் கர்நாடகாவின் சித்ரதுர்காவில் கைது செய்யப்பட்டார்.
தனது நான்கு வயது மகனைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட AI ஸ்டார்ட்-அப் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரிக்கு எதிராக கோவா காவல்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை, கொடூரமான கொலையின் பல திடுக்கிடும் விவரங்களை வெளிப்படுத்துகிறது.
சுசனா சேத்துக்கு எதிரான 642 பக்க குற்றப்பத்திரிகையை கோவா குழந்தைகள் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர், கலங்குட் போலீசார்.
அதில் அவர் எப்படி தனது மகனை கொலை செய்துவிட்டு தப்பிக்க முயன்றார் என்பதை விவரிக்கப்பட்டுள்ளது.
விவரங்கள்
குற்ற அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்கள்
சுசனா சேத், வழக்கத்திற்கு மாறாக கனமான பையுடன், தனது மகன் இல்லாமல் செக்-அவுட் செய்ததை பார்த்த ஹோட்டல் ஊழியர்கள் சந்தேகமடைந்தனர்.
அவரது அறைக்கு சென்று பார்த்தபோது, ரத்தக்கறை மற்றும் கையால் எழுதப்பட்ட கடிதம் இருப்பதைக் கண்டு, உடனடியாக போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அந்தக் கடிதத்தில், கணவருடனான தனது பகை மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளால் ஏற்பட்ட மனச் சோர்வு குறித்து எழுதியிருந்தார்.
அதனை ஐலைனரைப் பயன்படுத்தி டிஷ்யூ பேப்பரில் எழுதியிருந்தார்.
அந்தக் குறிப்பின் நம்பகத்தன்மையை கையெழுத்து நிபுணர்கள் உறுதி செய்துள்ளனர்.
உடனே காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்படவே, கோவா போலீசார் உடனடியாக அவர் பதிவு செய்த டாக்ஸி டிரைவரை தொடர்பு கொண்டு சுசனா சேத்துடன் பேசினர்.
கொலை
கொலை செய்தது எப்படி?
மட்கானில் உள்ள ஒரு நண்பரின் இடத்தில் தனது மகனை விட்டுச் சென்றதாகவும், ஹோட்டல் அறையில் இருந்த கறைகள் மாதவிடாய் இரத்தம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அவர் அவர்களுக்கு போலி முகவரியை வழங்கியதை உணர்ந்த போலீசார், டாக்ஸி டிரைவரிடம் பேசி, அருகில் உள்ள ஐமங்கலா காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லும்படி அறிவுறுத்தினர்.
பிரேத பரிசோதனையில், குழந்தை துணி அல்லது தலையணையால் மூச்சடைக்கப்பட்டு கொல்லப்பட்டது தெரிய வந்துள்ளது.
அதிகாரிகளின் கூற்றுப்படி, குழந்தை அதிர்ச்சி மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக கழுத்தை நெரிக்கப்பட்டதால் இறந்துள்ளது.