தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் அடுத்த 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்த அறிக்கையில், மேற்கு திசை காற்றின் வேகத்தில் மாறுபாடு ஏற்பட்ட காரணத்தினால் இன்று(ஜூலை.,8) தமிழ்நாடு, காரைக்கால், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் கொண்ட லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்பத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புகள் அதிகம் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்
இதனை தொடர்ந்து, நாளையும்(ஜூலை.,9) தமிழ்நாடு, காரைக்கால், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இந்த மழையானது ஜூலை 12ம் தேதி வரை மேலே குறிப்பிட்ட பகுதிகளில் நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து சென்னை மற்றும் புறநகரில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதே போல் நகரின் ஒருசில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது. சென்னையினை பொறுத்தவரை குறைந்தபட்ச வெப்ப நிலை 28 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 36 முதல் 37 வரை இருக்கக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.