Loading...
குளு குளு வானிலை! மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு

குளு குளு வானிலை! மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Sep 26, 2026
07:15 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் நாளை (செப்டம்பர் 27) லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட மலை சார்ந்த மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் விபரங்கள் இங்கே:-

மழை எச்சரிக்கை

டெல்டா மற்றும் தென் தமிழக மாவட்டங்களில் மிதமான மழை எச்சரிக்கை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களைத் தவிர்த்து, தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் நாளை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், தமிழகத்தின் ஏனைய உள் மாவட்டங்களில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒருசில இடங்களில் மிதமான வெப்பநிலை நிலவக்கூடும் என்றும் வானிலை மைய அதிகாரிகள் கணித்துள்ளனர்.

இடி மின்னல் உருவாகும் போது பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

சென்னை

தலைநகர் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு

தலைநகர் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நகரின் ஒருசில பகுதிகளில் மாலையிலோ அல்லது இரவிலோ லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 முதல் 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT