Page Loader
தமிழக சிறுமிகளுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி வழங்க நடவடிக்கை
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 80 ஆயிரம் பேர் கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்.

தமிழக சிறுமிகளுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி வழங்க நடவடிக்கை

எழுதியவர் Sindhuja SM
Feb 14, 2023
01:43 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தில் 9-14 வயதுடைய சிறுமிகளுக்கு பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகளிலேயே கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி(HPV) வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுகாதார துறை தெரிவித்துள்ளது. உலகில் மார்பக புற்றுநோய்க்கு அடுத்த படியாக அதிக பெண்களை பாதிக்கும் புற்றுநோய் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் ஆகும். உலகில் கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்படுவதில் 25% பேர் இந்தியாவை சேர்ந்தவர்கள் ஆவர். இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 80 ஆயிரம் பேர் இதனால் பாதிக்கப்படுகின்றனர். எனவே, இதை தடுக்க பெண் பிள்ளைகளுக்கு வளரிளம் பருவத்திலேயே HPV தடுப்பூசியை செலுத்த மத்திய அரசு முடிவு செய்தது. முதற்கட்டமாக தமிழகம், கர்நாடகம், மிசோரம், சத்தீஸ்கர், உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இதை தொடங்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகம்

HPV தடுப்பூசி திட்டம் குறித்து விளக்கம் அளித்த சுகாதாரத்துறை

எனவே, இந்த திட்டத்தை செயல்படுத்த ஆயத்த நிலையில் இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை தற்போது தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழக சுகாதாரத்துறை கூறி இருப்பதாவது: தமிழகத்தில் 9-14வயதுடைய பள்ளி மாணவிகளின் விவரத்தைத் திரட்டி வருகிறோம். பள்ளிகளில் இது குறித்த தகவல்கள் கேட்கப்பட்டிருக்கிறது. மத்திய அரசு தடுப்பூசிகளை வழங்கியதும் அது முறையாக குளிர்ப்பதன பெட்டிகளில் பராமரிக்கப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்படும். இந்த செயல்முறை பள்ளிகள், அங்கன்வாடி மையங்களிலேயே செயல்படுத்தப்படும். தற்போது இந்த திட்டம் ஆரம்ப நிலையில் இருப்பதால் இதற்கான முழு தகவல்களும் வெளியிடப்படவில்லை. விரைவில் இதற்கான முழு அறிவுறுத்தல்களும் வெளியிடப்படும். கொரோனா தடுப்பூசி மற்றும் பிற தேசிய தடுப்பூசி திட்டங்கள் எப்படி செயல்படுத்தப்பட்டதோ அதே போல் HPV தடுப்பூசி திட்டமும் வெற்றிகரமாக செயல்படுத்தப்படும்.