நீட் முறைகேடு விவகாரம்: பொது தேர்வு செயல்முறைகளில் சீர்திருத்தங்கள் செய்ய உயர்மட்ட குழுவை நியமித்தது மத்திய அரசு
நீட் தேர்வு மற்றும் யுஜிசி-நெட் தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கும் நிலையில், வெளிப்படையான சுமூகமான மற்றும் நியாயமான தேர்வுகளை நடத்துவதை உறுதி செய்வதற்காக உயர்மட்ட நிபுணர் குழு ஒன்றை மத்திய கல்வி அமைச்சகம் இன்று அமைத்ததது. தேர்வு செயல்முறையில் சீர்திருத்தங்கள் செய்வதற்கும், தரவு பாதுகாப்பு நெறிமுறைகளை மேம்படுத்துவதற்கும், தேசிய சோதனை முகமையின் கட்டமைப்பு மற்றும் செயல்பாடுகள் குறித்து பரிந்துரைகளை வழங்கவும் இந்த நிபுணர்கள் குழு செய்லபடும். இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) முன்னாள் தலைவரும், ஐஐடி கான்பூரின் கவர்னர் குழுவின் தலைவருமான டாக்டர் கே ராதாகிருஷ்ணன் இந்தக் குழுவுக்குத் தலைமை தாங்குவார்.
உயர்மட்ட குழுவின் மற்ற உறுப்பினர்கள்
அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின்(AIIMS) டாக்டர் ரன்தீப் குலேரியா, ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் பிஜே ராவ், பேராசிரியர் ராமமூர்த்தி கே, ஐஐடி மெட்ராஸ் சிவில் இன்ஜினியரிங் துறை பேராசிரியர் எமிரிட்டஸ் பங்கஜ் பன்சால், மக்கள் வலிமை குழுவின் இணை நிறுவனர் கர்மயோகி பாரத் மற்றும் ஐஐடி டெல்லியின் பேராசிரியர் ஆதித்யா மிட்டல் ஆகியோரும் இந்த குழுவில் உள்ளனர். கல்வி அமைச்சகத்தின் இணைச் செயலாளர் கோவிந்த் ஜெய்ஸ்வால் இந்த குழுவின் உறுப்பினர் செயலாளராக இருப்பார். கல்வி அமைச்சகத்தின் அறிக்கையின்படி, இந்த உயர்மட்ட குழு, அனைத்து தேர்வு செயல்முறையையும் ஆய்வு செய்து, அமைப்பின் செயல்திறனை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் பரிந்துரைக்கும்.