மதுரை, கோயம்புத்தூர் மெட்ரோ ரயில் திட்டம் நிராகரிப்பு! 'குறைந்த மக்கள் தொகையை' காரணம் காட்டியது மத்திய அரசு
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாடு அரசு முன்மொழிந்த கோயம்புத்தூர் மெட்ரோ ரயில் திட்டம் மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தின் ஒரு குறிப்பிட்ட புதிய பாதைக்கான முன்மொழிவு ஆகியவற்றை மத்திய அரசு நிராகரித்துள்ளது. இந்த திட்டங்களை நிராகரிப்பதற்கான முதன்மை காரணமாக, மத்திய அரசு, அந்த பகுதிகளில் உள்ள "குறைந்த மக்கள் தொகையை" குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா டுடே வெளியிட்ட செய்தியின்படி, தமிழ்நாட்டின் வளர்ந்து வரும் இரண்டாம் கட்ட நகரமான கோவை மற்றும் மதுரையில் பெருகிவரும் போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டு, மெட்ரோ ரயில் திட்டத்தை மாநில அரசு முனைப்புடன் முன்மொழிந்திருந்தது. 20 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்களுக்கு மட்டுமே மெட்ரோ ரயில் சேவையை அனுமதிப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
அளவுகோல்
மத்திய அரசு கூறும் காரணம் என்ன
இந்தத் திட்டங்களை மத்திய நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகம் ஆய்வு செய்தபோது, அந்தந்தப் பகுதிகளில் உள்ள தற்போதைய மக்கள் தொகை மற்றும் பயணிகளின் தேவைக்கான மத்திய அரசின் வரையறுக்கப்பட்ட அளவுகோல்களுடன் ஒப்பிடுகையில், அவை போதுமானதாக இல்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, கோயம்புத்தூர் மாநகராட்சியின் மக்கள் தொகை 15.84 லட்சமாகவும், உள்ளூர் திட்டமிடல் ஆணையத்தின் மக்கள் தொகை 23.5 லட்சமாகவும் இருந்தது. மதுரை மாநகராட்சியின் மக்கள் தொகை 10.20 லட்சமாகவும், நகர்ப்புற ஒருங்கிணைப்பு 14.7 லட்சமாகவும் இருந்தது. எனினும் இதைவிட குறைவான மக்கள் தொகை உள்ள ஆக்ரா, போபால் உள்ளிட்ட நகரங்களில் மெட்ரோ ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.