Page Loader
வலி குறைவான மரண தண்டனை குறித்து ஆராய திட்டமிட்டிருக்கும் மத்திய அரசு 
ஜூலை மாதம் இந்த வழக்கின் அடுத்த விசாரணை நடைபெற இருக்கிறது.

வலி குறைவான மரண தண்டனை குறித்து ஆராய திட்டமிட்டிருக்கும் மத்திய அரசு 

எழுதியவர் Sindhuja SM
May 02, 2023
06:49 pm

செய்தி முன்னோட்டம்

வலி குறைவான மரண தண்டனையை கண்டறிவதற்கு நிபுணர் குழுவை அமைப்பது குறித்து பரிசீலித்து வருவதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு இன்று(மே 2) தெரிவித்துள்ளது. தூக்கு தண்டனையை விட வலி குறைவாக இருக்கும் மரண தண்டனையை கண்டறிய வேண்டும். எனவே, அதற்கான தகவல்களை சேகரிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டிருந்தது. தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதி ஜே.பி.பார்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன், மத்திய அரசு சார்பில் பேசிய, அட்டர்னி ஜெனரல்(AG) ஆர்.வெங்கடரமணி, இது குறித்து ஆலோசனை நடந்து வருவதாக தெரிவித்தார். மேலும், உரிய பதிலைத் தெரிவிக்க ஒரு வார கால அவகாசம் வேண்டும் என்றும் அவர் கோரினார்.

DETAILS

தூக்கு தண்டனை மனிதாபிமானமற்றது: மனுதாரர் 

"நான் ஒரு குழுவை உருவாக்க பரிந்துரைத்துள்ளேன். அதற்கு சில பெயர்களைச் சேகரித்து வருகிறோம்," என்று அவர் மேலும் தெரிவித்தார். ஜூலை மாதம் இந்த வழக்கின் அடுத்த விசாரணை நடைபெற இருக்கிறது. மார்ச் 21அன்று, நிபுணர் குழுவை அமைப்பது குறித்து மத்திய அரசு ஆலோசிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது. தூக்கு தண்டனையை விட வலி குறைவான மரண தண்டனை இருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என்று அப்போது உச்ச நீதிமன்றம் மத்திய அரசிடம் கேட்டுக் கொண்டது. 2017-ல் வழக்கறிஞர் ரிஷி மல்ஹோத்ரா, தூக்கு தண்டனையை எதிர்த்து மனு தாக்கல் செய்தார். தூக்கு தண்டனை "மனிதாபிமானமற்றது" என்றும், "கொடூரமானது" என்றும், குற்றவாளியின் அடிப்படை உரிமையை மீறுகிறது என்றும் அவர் வாதிட்டார்.