
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் விசாரணையை என்ஐஏவிடம் ஒப்படைத்தது மத்திய அரசு
செய்தி முன்னோட்டம்
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் விசாரணையை தேசிய புலனாய்வு முகமையிடம் (என்ஐஏ) உள்துறை அமைச்சகம் (MHA) முறையாக ஒப்படைத்துள்ளது.
ஏப்ரல் 26 சனிக்கிழமையன்று இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது, இது என்ஐஏ வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடர அதிகாரம் அளிக்கிறது.
வழக்கு நாட்குறிப்பு மற்றும் முதல் தகவல் அறிக்கையை உள்ளூர் காவல்துறையிடமிருந்து என்ஐஏ பெறும்.
என்ஐஏவின் தடயவியல் குழு ஏற்கனவே பஹல்காமில் குற்றம் நடந்த இடத்தில் உள்ளது. அங்கு ஆரம்ப ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன.
முன்னதாக, ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பைசரன் பள்ளத்தாக்கில் உள்ள பஹல்காமில் பயங்கரவாத தாக்குதல் நடந்தது.
அங்கு பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகள் 26 பேரைக் கொன்றனர். அதே நேரத்தில் பலர் காயமடைந்தனர்.
நடவடிக்கை
பாகிஸ்தானுக்கு எதிராக நடவடிக்கை
இந்த பயங்கரவாத தாக்குதலின் பின்னணியில் உள்ள பாகிஸ்தானுக்கு எதிராக, மத்திய அரசு ராஜாங்க ரீதியில் பல கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
பாகிஸ்தானுடனான சிந்து நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்து ஒருங்கிணைந்த அட்டாரி சோதனைச் சாவடியை மூடியுள்ளது.
கூடுதலாக, ஏப்ரல் 27 முதல் நடைமுறைக்கு வரும் வகையில், பாகிஸ்தான் குடிமக்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து வகையான விசாக்களையும் அரசாங்கம் ரத்து செய்துள்ளது. அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சிகள் ஒருமனதாக ஆதரவளித்துள்ளன.
இதற்கிடையில், காஷ்மீரில் பெரிய அளவிலான தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கை நடந்து வருகிறது.
பாதுகாப்புப் படையினர் பல பயங்கரவாதிகளின் வீடுகளை இடித்துத் தள்ளினர் மற்றும் பயங்கவாதிகளுக்கு உதவுவதாக சந்தேகிக்கப்படும் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.