அக்னிவீர் பணி நெறிமுறையில் மாற்றம்: சேவைக்காலத்தை 6 ஆண்டுகளாக உயர்த்த மத்திய அரசு திட்டம்
செய்தி முன்னோட்டம்
இந்திய ராணுவம், கடற்படை மற்றும் விமானப் படைகளில் அக்னிபாத் திட்டத்தின் கீழ் பணியாற்றும் அக்னிவீரர்களின் தற்போதைய 4 ஆண்டுகால பணிக்காலத்தை 6 ஆண்டுகளாக உயர்த்த மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்திட்டம் 'இரண்டாம் கட்ட சேவைக்காலம்' என்று அழைக்கப்படும் என்றும், 6 ஆண்டுகள் முடிவடைந்த பிறகு தகுதியுடைய நபர்கள் நிரந்தரப் பணியாளர்களாக மாற்றப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் நவம்பர் 21, 2026-க்குள் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அக்னிபாத் திட்டம்
தற்போதைய அக்னிபாத் திட்டம்: ஒரு பார்வை
17.5 வயது முதல் 21 வயது வரையிலான இளைஞர்கள், 10 அல்லது 12-ஆம் வகுப்பு தேர்ச்சியின் அடிப்படையில் 4 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் சேர்க்கப்படுகின்றனர்.
முதலாண்டில் ₹30,000 தொடங்கப்பட்டு 4-வது ஆண்டில் ₹40,000 ஆக உயர்த்தப்படுகிறது.
இதில் 30% பிடித்தம் செய்யப்பட்டு அரசுப் பங்களிப்புடன் சேர்த்து 4 ஆண்டுகள் முடிவில் வரிவிலக்கு அளிக்கப்பட்ட ₹11.71 லட்சம் சேவா நிதி பாக்கெட்டாக வழங்கப்படுகிறது.
4 ஆண்டுகள் சேவைக்குப் பிறகு ஒவ்வொரு பேட்சிலும் 25% அக்னிவீரர்கள் நிரந்தர ராணுவப் பணியில் இணைத்துக் கொள்ளப்படுவர்; மீதமுள்ள 75% பேர் ஓய்வுபெறுவர்.
2 ஆண்டுகள் நீட்டிப்பு
புதிய 2 ஆண்டுகள் நீட்டிப்பு முன்மொழிவு
2022-இல் சேர்க்கப்பட்ட முதலாவது பேட்ச் அக்னிவீரர்களின் 4 ஆண்டுகாலப் பணிக்காலம் நிறைவடையும் நிலையை எட்டியுள்ளது.
இந்தியக் கடற்படையின் முதல் பேட்ச் அக்னிவீரர்கள் நவம்பர் 21 அன்றும், விமானப்படை அக்னிவீரர்கள் டிசம்பர் 21 அன்றும், இந்திய ராணுவ அக்னிவீரர்கள் டிசம்பர் 31 அன்றும் 4 ஆண்டுகாலப் பணியை நிறைவு செய்கின்றனர்.
75% வெளியேறும் அக்னிவீரர்களில் குறிப்பாக கடற்படை மற்றும் தொழில்நுட்ப பிரிவுகளைச் சேர்ந்த திறமையான வீரர்களை மேலும் 2 ஆண்டுகள் தக்கவைத்துக்கொள்ள படைகள் விரும்புகின்றன.
அடுக்கு நிலைகள்
படைப் பிரிவுகளில் உருவாக்கப்படும் 3 அடுக்கு நிலைகள்
இந்த முன்மொழிவு ஏற்றுக்கொள்ளப்பட்டால், ராணுவப் படைகளில் 3 வகையான பிரிவுகள் உருவாகும்.
1. 4 ஆண்டு வழக்கமான சேவையை முடித்து வெளியேறுபவர்கள்.
2. 2 ஆண்டுகள் கூடுதல் சேவைக்காலம் பெறுபவர்கள்.
3. 25% நிரந்தரப் பணியாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள்.
ஆரம்பக்கட்டத்தில் சேர்க்கப்பட்ட 24,400 அக்னிவீரர்களில், விமானப்படை ஏற்கனவே 712 வீரர்களையும், கடற்படை 550 வீரர்களையும் நிரந்தரப் பணிக்காக தேர்ந்தெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
படைகளின் செயல்பாட்டுத் தயார்நிலையைப் பராமரிக்க நிரந்தரச் சேர்க்கை வரம்பை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.