இண்டிகோ கோளாறு: உரிய நடவடிக்கை எடுப்பதாக மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் உறுதி
செய்தி முன்னோட்டம்
இண்டிகோ விமான நிறுவனத்தில் தொடர்ச்சியாக ஏற்பட்டு வரும் விமான சேவைகள் ரத்து மற்றும் தாமதங்கள் குறித்து விசாரணைக்குப் பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு கின்ஜராபு உறுதியளித்துள்ளார். இந்த நிலைமை மேம்பட்டு வருவதாகவும், விமான நிலையங்களில் பயணிகளின் காத்திருப்பு ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 7) முதல் முடிவுக்கு வரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
குழு அமைப்பு
விசாரணைக்காக அமைக்கப்பட்ட குழு
கடந்த ஐந்து நாட்களாகத் தொடரும் இந்த மாபெரும் விமானச் சேவைகள் ரத்துக்குக் காரணம் என்ன, அதற்குப் பொறுப்பானவர்கள் யார் என்பதைக் கண்டறிய ஒரு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ராம் மோகன் நாயுடு கூறினார். அரசாங்கத்தின் உடனடி முன்னுரிமை இயல்பு நிலையை மீட்டெடுப்பதும், பயணிகளுக்கு முழு ஆதரவை வழங்குவதும் ஆகும் என்றும் அவர் தெரிவித்தார். "கடந்த இரண்டு நாட்களாக இருந்த நிலுவைகள் சரிசெய்யப்பட்டுள்ளன. நாளை முதல் விமான நிலையங்களில் நெரிசலோ அல்லது காத்திருப்பவர்களோ இருக்க மாட்டார்கள் என்ற அளவில் நிலைமை சாதாரணமாகத் தொடங்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்." என்று அவர் கூறினார்.
நடவடிக்கை
கடும் நடவடிக்கை உறுதி
மேலும் பேசிய அமைச்சர், விமான நிறுவனங்களின் செயல்பாடு, ஊழியர்களின் பணியிடக் கடமை நேர விதிகள் (FDTL) மற்றும் அட்டவணை நெட்வொர்க் உள்ளிட்ட அனைத்தும் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இந்தச் சம்பவம் 'கவனிக்கப்படாமல் விடப்படாது' என்றும் அவர் வலியுறுத்தினார். "இந்தக் குழப்பத்திற்குப் பொறுப்பானவர்கள் யார் என்பதைக் கண்டறிந்து, அவர்கள் மீது தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். தவறு செய்தவர்கள் நிச்சயம் பதிலளித்தே ஆக வேண்டும்." என்று அவர் கடுமையாகத் தெரிவித்தார். சனிக்கிழமை நிலவரப்படி, டெல்லி விமான நிலையத்தில் இண்டிகோவின் செயல்பாடுகள் படிப்படியாக இயல்பு நிலைக்குத் திரும்பினாலும், திருவனந்தபுரம் மற்றும் அகமதாபாத் உள்ளிட்ட பிற முக்கிய விமான நிலையங்களில் விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்ட நிலை தொடர்ந்தது.