தமிழகத்தில் மழையால் சேதமடைந்த நெல்லின் ஈரப்பதம் குறித்து மத்திய குழுவினர் ஆய்வு
தமிழகத்தில் பருவம் தவறிய கனமழையால் அறுவடைக்கு தயார்நிலையில் இருந்த பயிர்கள் சேதமடைந்தன. இதுகுறித்து ஆய்வுகளை மேற்கொண்டு, ஆலோசனைக்கூட்டம் நடத்தப்பட்டு முதல்வர் நிவாரண அறிக்கைகளை அண்மையில் அறிவித்தார். அதுமட்டுமில்லாமல் மழையால் பாதிப்படைந்த அறுவடை செய்யப்பட்ட நெற்களை நேரடி கொள்முதல் செய்திடும்போது விவசாயிகள் நலன்கருதி, 22சதவிகிதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய உரியதளர்வுகளை வழங்க பிரதமர் மோடிக்கும் கோரிக்கை கடிதம் எழுதினார். இந்நிலையில், நெல்லின் ஈரப்பதம் குறித்து ஆய்வுசெய்ய மத்தியஅரசு ஆய்வுக்குழுவினை தமிழகத்திற்கு அனுப்பிவைத்தது. நேற்று மூன்றுபேர் கொண்ட இந்த மத்திய ஆய்வுக்குழுவினர் முதற்கட்டமாக நாகப்பட்டின மாவட்டம் வேதாரண்யத்தில் தலைஞாயிறு பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வுபணியினை மேற்கொண்டனர். நெல்லின் ஈரப்பதம் குறித்து ஆய்வுசெய்த அவர்கள், நெல் மாதிரிகளையும் ஆய்வுக்கு எடுத்துகொண்டனர்.
அழுகிய நெற்பயிர்களை கையில் கொண்டு மத்திய ஆய்வு குழுவிடம் அளித்த விவசாயிகள்
அப்போது அங்கு திரண்ட விவசாயிகள் அழுகிய நெற்பயிர்களை கையில் கொண்டுவந்து மத்திய குழுவிடம் கொடுத்தனர். அவர்கள் அதனை புகைப்படம் எடுத்துகொண்டதோடு, ஆய்வுக்கான மாதிரியையும் வாங்கிகொண்டனர். இதனைதொடர்ந்து விவசாயிகள் ஓர் மனுவையும் அவர்களிடம் அளித்தனர். அதில், தற்போது 19சதவிகிதம் வரையிலான நெல்கொள்முதல் செய்யப்படுகிறது. மழையால் நெல்லின் ஈரப்பதம் அதிகரித்துள்ள நிலையில் 22சதவிகிதம் வரையிலான ஈரப்பத நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும். கொள்முதல் நிலையங்களில் தினமும் 1000மூட்டை கொள்முதலை அதிகரிக்கவேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இதனை வாங்கிக்கொண்ட மத்திய ஆய்வுகுழு, மத்திய அரசிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். வரும் 13ம் தேதி மத்திய அரசிடம் இவர்கள் அறிக்கை தாக்கல் செய்யவுள்ளார்கள். அதன்பின்னரே, நெல்லின் ஈரப்பத தளர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.