தொலைந்த மொபைல்களைக் கண்டறிய புதிய சேவை.. அறிமுகப்படுத்துகிறது மத்திய அரசு!
தொலைந்த அல்லது திருடுபோன மொபைல் போன்களை கண்டுபிடிக்கவும், அதனை மற்றவர்கள் பயன்படுத்தாமல் தடுக்கும் வகையிலும் உதவக்கூடிய புதிய வலைத்தளத்தை அறிமுகப்படுத்தவிருக்கிறது மத்திய அரசு. இந்தப் புதிய சேவையை அடுத்த இரண்டு நாட்களில் மத்திய அரசு வெளியிடலாம் என மத்திய தொலைதொடர்பு துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார். மத்திய தொலைதொடர்பு துறையின் கீழ் இயங்கி வரும் டெலிமேட்டிக்ஸ் மேம்பாட்டு அமைப்பே இந்தப் புதிய வசதியை உருவாக்கி இருக்கிறது. இந்தப் புதிய சேவையை நடப்பு காலாண்டிற்குள் மத்திய அரசு வெளியிடும் எனத் தெரிவித்திருக்கிறார் இந்த அமைப்பின் தலைவரும், சிஇஓ-வுமான ராஜ்குமார் உபத்யாய். பயன்படுத்திய மொபைல்போன்களை வாங்குபவர்களும், இந்த சேவையின் மூலம் தாங்கள் வாங்கும் மொபைல்போன் திருடப்பட்டதா என்பதைக் கண்டறிய முடியும்.
CEIR சேவை:
Central Equipment Identity Register (CEIR) எனப்படும் இந்த சேவையை நாடு முழுவதும் அறிமுகப்படுத்தவிருக்கிறது மத்திய அரசு. ஆனால், CEIR வலைத்தளத்தில் குறிப்பிட்டிருக்கக்கூடிய தகவல்களின்படி இந்தியாவின் சில மாநிலங்களில் ஏற்கனவே இந்த வசதி செயல்பாட்டில் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும், சில மாநிலங்களில் மட்டும் இன்னும் சில மாதங்களில் அறிமுகப்படுத்தவிருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அத்தளத்தில் உள்ள தகவலின்படி தமிழகத்தில் கடந்த மார்ச் 15-ம் தேதியில் இருந்தே இந்த சேவை பயன்பாட்டில் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மார்ச் 15 மற்றும் அதற்கு பிறகு தொலைந்த மொபைல் போன்களை இந்தப் புதிய சேவையைப் பயன்படுத்த கண்டறியவோ அல்லது தடுக்கவோ முடியும். மத்திய அரசின் இந்தப் புதிய சேவை வளைத்தளத்திற்குச் செல்ல இங்கே கிளிக் செய்யவும்.