நாளை முதல் ரேஷன் கார்டுகள் தற்காலிக முடக்கம்: 1.58 கோடி பயனாளிகளுக்குப் பாதிப்பா? தப்பிக்க என்ன செய்ய வேண்டும்?
செய்தி முன்னோட்டம்
கடந்த 6 மாதங்களாக ரேஷன் பொருட்களை பெறாத 1.58 கோடி பயனாளிகளின் ரேஷன் சலுகைகளை அக்டோபர் 1-ஆம் தேதி முதல் தற்காலிகமாக முடக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. போலி குடும்ப அட்டைகளை கண்டறிந்து நீக்கவும், தகுதியுடைய ஏழை மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் சரியாக சென்றடைவதை உறுதி செய்யவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து 6 மாதங்களுக்கு மேல் பொருட்கள் வாங்காத அட்டைகள் "பயன்பாட்டில் இல்லாத அட்டைகளாக" வகைப்படுத்தப்படுகின்றன.
தற்காலிக முடக்கம்
தற்காலிக முடக்கமும் e-KYC கால அவகாசமும்
பயனாளிகளின் பெயர்கள் தரவுத்தளத்தில் இருந்து உடனடியாக நீக்கப்படாது; முதற்கட்டமாகச் சலுகைகள் மட்டுமே நிறுத்தி வைக்கப்படும்.
தங்களை உண்மையான பயனாளிகள் என நிரூபிக்க அவர்களுக்கு 3 மாத கால அவகாசம் வழங்கப்படுகிறது.
இந்த காலக்கட்டத்திற்குள் e-KYC நடைமுறையை நிறைவு செய்து தகுதியை உறுதிப்படுத்தினால், ரேஷன் அட்டைகள் மீண்டும் செயல்பாட்டிற்கு வரும்.
தற்போதைய நிலை
கைவிரல் ரேகைப் பதிவின் தற்போதைய நிலை
நாடு முழுவதும் 80.5 கோடி மக்கள் உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 20.4 கோடி ரேஷன் கார்டுகள் மூலம் பயனடைந்து வருகின்றனர்.
ஒரே நபர் பல கார்டுகளில் இடம்பெறுவது, இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்படாமல் இருப்பது போன்ற முறைகேடுகளை தவிர்க்க கைவிரல் ரேகைப் பதிவு (e-KYC) கட்டாயமாக்கப்பட்டது.
தற்போது வரை நாடு முழுவதும் 90.64% பேர் தங்களது கைவிரல் ரேகையைப் பதிவு செய்துள்ளனர்.
விடுபட்டவர்கள் மற்றும் 6 மாதமாகப் பொருட்கள் வாங்காதவர்கள் அக்டோபர் 1 முதல் தற்காலிகமாக பாதிக்கப்படுவர் என்பதால், உடனடியாக தங்கள் பகுதி நியாயவிலை கடைகளில் e-KYC நடைமுறையை முடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.