அலுவலகங்களை சுத்தம் செய்ததன் மூலம் ரூ.600 கோடி வருவாய் ஈட்டிய மத்திய அரசு
இந்திய அரசு அலுவலகங்களை தூய்மைப்படுத்தும் பொருட்டு சிறப்புப் பிரச்சாரம் ஒன்றை 2021ம் ஆண்டு தொடங்கியது மத்திய அரசு. இந்த சிறப்புப் பிரச்சாரத்தின் கீழ், அரசு அலுவலகங்களில் சேதமடைந்த பொருட்கள் மற்றும் பயன்படுத்த முடியாது வாகனங்கள் உள்ளிட்டவற்றை களையெடுத்து விற்பனை செய்யத் தொடங்கியது மத்திய அரசு. ஆச்சரியப்படும் வகையில், இந்த நடவடிக்கையின் மூலம் மத்திய அரசு சுமார் ரூ.600 கோடி வருவாய் ஈட்டியிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 2021 அக்டோபரில் முதல் முறையாக இத்திட்டத்தை செயல்படுத்தத் தொடங்கியது மத்திய அரசு. இத்திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து, தற்போது வரை தேவையற்ற 31 லட்சம் அரசு ஆவணங்கள் களையப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்புப் பிரச்சாரம் 3.0:
கடந்த இரண்டு ஆண்டுகளாக இரண்டு சிறப்புப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், இந்த ஆண்டு அக்டோபர் மாதம் மூன்றாவது சிறப்புப் பிரச்சாரத்தை மேற்கொள்ளவிருக்கிறது மத்திய அரசு. இந்த சிறப்புப் பிரச்சாரத்தின் மூலம் ரூ.400 கோடி வருவாய் ஈட்டவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. மேலும், இது போன்று தேவையற்ற பொருட்களைக் களைவது அரசு அலுவலகங்களில் தற்போது மாதாந்திர நடவடிக்கையாகவும் மாற்றப்பட்டு வருகிறது. கூடுதல் வருவாய் மட்டுமின்றி, அரசு அலுவலகங்களில் பெரும்பகுதி இடத்தை தேவையற்ற பொருட்கள் ஆக்கிரமித்திருந்ததால், அரசு அலுவலக செயல்பாடுகளுக்கு இத்திட்டத்தின் மூலம் கூடுதல் இடமும் கிடைத்திருக்கிறது. இத்திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து தற்போது வரை 1.01 லட்சம் அரசு அலுவலகங்களில், 185 லட்சம் சதுரடிகள் இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த தேவையற்ற பொருட்கள் சுத்தம் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.