Page Loader
மானிய விலையில் வெங்காயத்தை விற்பனை செய்யத் திட்டமிட்டிருக்கும் மத்திய அரசு
மானிய விலையில் வெங்கயாத்தை விற்பனை செய்யத் திட்டமிட்டிருக்கும் மத்திய அரசு

மானிய விலையில் வெங்காயத்தை விற்பனை செய்யத் திட்டமிட்டிருக்கும் மத்திய அரசு

எழுதியவர் Prasanna Venkatesh
Aug 21, 2023
10:31 am

செய்தி முன்னோட்டம்

மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பருவம் மாறிப் பொழிந்த மழையின் காரணமாக, கடந்த ஏப்ரல் மாதம் மேற்கூறிய மாநிலங்களில் விளைந்த வெங்காயத்தின் ஆயுட்காலம் குறைந்திருக்கிறது. இதன் காரணமாக அடுத்த மாதம், வெங்காயத்திற்கான தட்டுப்பாடு ஏற்படும் நிலை எழுந்திருக்கிறது. மேலும், இந்த ஆண்டுத் தொடக்கத்தில் ரூ.20-க்கு விற்பனையாகி வந்த வெங்காயம், தற்போது ரூ.30-க்கு விற்பனையாகி வருகிறது. இந்தியாவில் வெங்காய வர்த்தகத்திற்கான மையமாக விளங்கும் மகாராஷ்டிராவின் லசல்கயானில், கடந்த ஆகஸ்ட் 2ல் வெங்காயமானது, குவிண்டாலுக்கு ரூ.1,370 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனால், கடந்த சனிக்கிழமை வெங்காய விலை 50% வரை உயர்ந்து குவிண்டாலுக்கு ரூ.2,050 என்ற விலையில் விற்பனையாகியிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்னர் குவிண்டால் ரூ.950-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்தியா

வெங்காயம்

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த தேவைப்படும் போது பயன்பாட்டிற்கு அளிக்கும் வகையில், ஏற்கனவே 4 லட்சம் டன் வெங்காயத்தை கையிருப்பில் வைத்திருக்கிறது மத்திய அரசு. மேலும், 1 லட்சம் டன் வெங்காயத்தைக் கொள்முதல் செய்ய NCCF (National Cooperative Consumer Federation of India) மற்றும் NAFED (National Agricultural Cooperative Marketing Federation) ஆகிய அமைப்புகளுக்கு உத்தரவிட்டிருக்கிரது நுகர்வோர் நலத்துறை. வெங்காய விலை அதிகரித்து வருவதையடுத்து, இன்று முதல் சில்லறை வணிகக்கடைகள் மற்றும் நகரும் காய்கறிக் கடைகள் மூலமாக ரூ.25 என்ற விலையில் வெங்காயத்தை விற்பனை செய்யத் திட்டமிட்டிருக்கிறது மத்திய அரசு. இத்துடன், வெங்காயத்தின் ஏற்றுமதி அளவைக் கட்டுப்படுத்தும் வகையில், வெங்காயத்தின் மீது 40% ஏற்றுமதி வரியையும் மத்திய அரசு விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.