
ஆபரேஷன் சிந்தூர் தொடர்ந்து செயல்பாட்டில் இருப்பதாக பாதுகாப்புப் படைத் தலைவர் அனில் சவுகான் தகவல்
செய்தி முன்னோட்டம்
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக இந்தியாவின் தொடர்ச்சியான ராணுவ நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூர் இன்னும் செயலில் இருப்பதாக பாதுகாப்புப் படைத் தலைவர் ஜெனரல் அனில் சவுகான் உறுதிப்படுத்தியுள்ளார். வெள்ளிக்கிழமை (ஜூலை 25) டெல்லியில் நடந்த ஒரு பாதுகாப்பு கருத்தரங்கில் பேசிய அனில் சவுகான், இந்திய ஆயுதப்படைகள் 24/7 எந்த ஆக்கிரமிப்பையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும், மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பதாகவும் எடுத்துரைத்தார். நவீன போரின் தன்மையை வலியுறுத்தி, "போரில் இரண்டாம் இடம் பெறுபவர்கள் யாரும் இல்லை" என்று சவுகான் கூறினார். மேலும், நிலையான தயார்நிலையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். ராணுவ மூலோபாயத்தில் மூன்றாவது புரட்சியை விவரிக்க ஒருங்கிணைந்த போர் என்ற வார்த்தையை அவர் அறிமுகப்படுத்தினார்.
ஒருங்கிணைந்த போர்
ஒருங்கிணைந்த போர் என்பது என்ன?
தந்திரோபாய, செயல்பாட்டு மற்றும் மூலோபாய நிலைகளில் இயக்கவியல் மற்றும் இயக்கமற்ற நடவடிக்கைகளின் கலவையே ஒருங்கிணைந்த போர் முறையாகும். ராணுவ சிந்தனையில் 'சாஸ்திரம்' (ஆயுதங்கள்) மற்றும் 'சாஸ்திரம்' (அறிவு) ஆகியவற்றுக்கு இடையே சமநிலையை ஏற்படுத்த வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார். முன்னதாக, 26 பொதுமக்களைக் கொன்ற பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டது. புல்வாமா (2019) மற்றும் மும்பை (2008) உள்ளிட்ட கடந்தகால தாக்குதல்களுக்குப் பின்னணியில் இருந்த ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் லஷ்கர்-இ-தொய்பா போன்ற குழுக்களால் இயக்கப்படும் ஒன்பது முக்கிய முகாம்களை இந்தியா இந்த ஆபரேஷனில் துல்லியமாகத் தாக்கி அழித்தது.
பாகிஸ்தான்
பாகிஸ்தான் தாக்குதல் முயற்சி
தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்கியதற்கு எதிராக, மே 8 முதல் 10 வரை இந்திய ராணுவத் தளங்கள் மீது தாக்குதல் நடத்த பாகிஸ்தான் முயன்றது. இதற்கு பதிலடியாக, பாகிஸ்தான் ராணுவ நிலைகளை குறிவைத்து ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் மூலம் இந்தியா கடுமையான பதிலடி கொடுத்தது. நான்கு நாட்கள் மோதலுக்குப் பிறகு, இந்தியாவின் தாக்குதலை தாக்குப் பிடிக்க முடியாமல், மே 10 அன்று பரஸ்பரம் தாக்குதலை நிறுத்திக் கொள்ளலாம் என இந்தியாவிடம் மன்றாடியது. இதையடுத்து இருதரப்பும் தாக்குதலை நிறுத்தினாலும், ஜெனெரல் அனில் சவுகானின் அறிக்கை இந்தியாவின் நடவடிக்கைகள் உயர் தயார்நிலை முறையில் தொடர்வதை உறுதிப்படுத்துகிறது.