Loading...
CBSE 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை 2027: காலதாமதம் ஏன்? வெளியீடு எப்போது?
2027ஆம் ஆண்டுக்கான CBSE தேர்வு அட்டவணை இன்னும் வெளியிடப்படாமல் உள்ளது

CBSE 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை 2027: காலதாமதம் ஏன்? வெளியீடு எப்போது?

எழுதியவர் Venkatalakshmi V
Oct 30, 2026
01:12 pm

செய்தி முன்னோட்டம்

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்(CBSE) நடத்தும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான தேர்வு பட்டியல் (LOC) சமர்ப்பிக்கும் கெடு நிறைவடைந்துள்ள நிலையிலும், 2027ஆம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணை இன்னும் வெளியிடப்படாமல் உள்ளது. இதனால் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் மத்தியில் தேர்வு அட்டவணை எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு கணிசமாக அதிகரித்துள்ளது. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் 2026-27 கல்வியாண்டில் தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் தேர்வுப் பட்டியலைச் சமர்ப்பிக்கும் நடைமுறை செப்டம்பர் 24 அன்று தொடங்கியது. அக்டோபர் 21 வரை வழக்கமான கட்டணத்துடன் விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டது. தாமதக் கட்டணத்துடன் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் அக்டோபர் 30 ஆகும்.

காரணங்கள்

கடந்த ஆண்டு ஒப்பீடு மற்றும் காலதாமதத்திற்கான காரணங்கள்

கடந்த 2026ஆம் ஆண்டு பொதுத்தேர்வுகளுக்கு தற்காலிக அட்டவணை செப்டம்பர் 24 அன்றே வெளியிடப்பட்டு, இறுதி அட்டவணை அக்டோபர் 30 அன்று அதிகாரப்பூர்வமாக வெளியானது.

ஆனால் இந்த ஆண்டு, அக்டோபர் இறுதி வாரத்தை எட்டியும் தேர்வு அட்டவணை வெளியாகவில்லை.

மேற்கு ஆசிய நாடுகளில் பயிலும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான சிறப்புத் தேர்வுகள் அக்டோபர் 23 முதல் 28 வரை நடத்தப்பட்டதும், தேர்வுப் பட்டியலின் இறுதித் தரவுகளை சரிபார்க்கும் பணிகள் நடைபெற்று வருவதுமே தேர்வு அட்டவணை தாமதமாவதற்கு காரணமாக கருதப்படுகிறது.

அட்டவணை

அட்டவணையை பதிவிறக்கம் செய்வது எப்படி?

சிபிஎஸ்இ வாரியம் விரைவில் தற்காலிகத் தேர்வு அட்டவணையை தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

cbse.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.

'Latest @ CBSE' அல்லது 'Main Website' பிரிவைத் தேர்வு செய்ய வேண்டும்.

10 அல்லது 12ஆம் வகுப்பு 'Date Sheet 2027' லிங்கை கிளிக் செய்து அட்டவணையைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

அட்டவணை வெளியாகும் வரை, சிபிஎஸ்இ வெளியிட்டுள்ள மாதிரி வினாத்தாள்களை கொண்டு மாணவர்கள் தங்களது தேர்வுக்குத் தயாராகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT