காவிரி நீர் விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் அவசர மனுத்தாக்கல் செய்த கர்நாடக அரசு
தமிழகத்திற்கு காவிரி நதி நீர் திறந்து விட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதுகுறித்து காவிரி மேலாண்மை ஆணையம், உச்ச நீதிமன்றம் உள்ளிட்டவைகளில் தமிழகம் முறையிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்திற்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிட வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. ஆனால் தங்கள் தேவைக்கு மட்டுமே தண்ணீர் இருப்பதால் திறந்துவிட முடியாது என்று கர்நாடக அரசு கூறுகிறது. இந்நிலையில் டெல்டா மாவட்டங்களில் பயிர்கள் நாசமாகி விடும் அபாயம் உள்ளதால் உடனே தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று வலியுறுத்த கோரி நேற்று(செப்.,19)டெல்லியில் அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தமிழக அமைச்சர்கள் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
டெல்லியில் ஆலோசனை நடத்திய கர்நாடக முதல்வர் சித்தராமையா
இந்நிலையில் இந்த காவிரி விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?என்பது குறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையா அனைத்து கட்சி எம்.பி.,க்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். இதில் உச்சநீதிமன்றத்தை நாடலாம் என்று முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து, தமிழகத்திற்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிடுமாறு காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவினை தடை செய்ய வேண்டும் என்று கோரி கர்நாடகா அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், தமிழகம் வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடி நீர் கேட்கையில் தங்களால் முடிந்த அளவு 2000ல் இருந்து 10,000 கனஅடி நீர் வரை திறந்ததாகவும், தற்போது தங்களுக்கே 120 டி.எம்.சி.க்கு மேல் தண்ணீர் தேவைப்படுவதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட இயலாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.