காவிரி நதிநீர் விவகாரம் - மத்திய அமைச்சரை சந்திக்கும் எம்.பி.க்கள் குழு
காவிரி நதி நீரினை தமிழகத்திற்கு திறந்து விட இயலாது என்று கர்நாடகா மாநில முதல்வர் சித்தராமையா உறுதியாக கூறி வருகிறார். இது குறித்து அவர் மத்திய அமைச்சருக்கு அண்மையில் கடிதம் ஒன்றினையும் எழுதி அனுப்பினார். அதில் அவர், கேரளாவில் மழை குறைபாட்டினை காரணம் காட்டி, தங்கள் மாநில மக்களின் குடிநீர் தேவை மற்றும் விவசாயத்திற்கு வழங்கக்கூடிய அளவில் மட்டும் அணைகளில் நீர் இருப்பதால், தமிழகத்திற்கு காவிரிநீரை திறந்துவிட முடியாது என்று குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரானது நாளை(செப்.,18) டெல்லியில் துவங்கவுள்ள நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்.பி.க்களுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று(செப்.,16)ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
கோரிக்கை மனு அளிக்க முடிவு
அதில் அவர், காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடகா அரசு உண்மைக்கு புறம்பான தகவல்களை மத்திய அமைச்சரிடம் அளித்துள்ளது என்று குற்றம்சாட்டி பேசியிருந்தார். இதனைத்தொடர்ந்து, முதல்வரின் அறிவுறுத்தல்படி, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையிலான தமிழக எம்.பி.க்கள் குழுவானது நாளை மாலை டெல்லியில் மத்திய ஜல் சக்தித்துறை அமைச்சரான கஜேந்திர சிங் ஷெகாவத்தை நேரில் சந்தித்து கோரிக்கை மனுவினை கொடுக்கவுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த மனுவில், 'தமிழகத்திற்கு உரிய காவிரி நீரினை கர்நாடகா அரசு உடனடியாக திறந்துவிட வலியுறுத்தி உத்தரவிட வேண்டும்' என்று கோரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.