கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கில் கைதான 5 பேரிடம் NIA விசாரணை
கோவை மாவட்டம் உக்கடம் கோட்டை அருகே உள்ள ஒரு கோவில் இருக்கும் பகுதியில் கடந்த அக்டோபர் மாதம் 23ஆம் தேதி கார் சிலிண்டர் வெடித்தது. இதில் ஜமேஷா முபின்(25) என்பவர் உயிரிழந்தார். இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இதை விசாரிக்கும் தேசிய புலனாய்வு முகமை (NIA) அதிகாரிகள் 11 பேரை கைது செய்தனர். இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு தாங்கள் தான் காரணம் என்று ஐஎஸ் தீவிரவாத அமைப்பு கூறி இருந்தது. இந்த தகவலை அந்த அமைப்பிற்கு ஆதரவான 'வாய்ஸ் ஆஃப் கொரசான்' பத்திரிகை மூலம் டார்க் வெப்சைட்டில் வெளியிட்டிருந்தது.
7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி
இதற்கிடையில், இந்த வழக்கில் கைதுசெய்யப்பட்ட பெரோஸ் இஸ்மாயில், முகமது அசாருதீன், உமர் பாரூக், நவாஸ் இஸ்மாயில், பெரோஸ்கான் ஆகியோரை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க NIA அதிகாரிகள் அனுமதி பெற்றனர். இதனையடுத்து, பெரோஸ் இஸ்மாயில், முகமது அசாருதீன், உமர் பாரூக், நவாஸ் இஸ்மாயில், பெரோஸ்கான் ஆகிய 5 பேரையும் கோவை காவலர் பயிற்சிக் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக NIA அலுவலகத்திற்கு நேற்று காலை அழைத்து வந்த அதிகாரிகள், அவர்களிடம் விசாரணை நடத்தினர். இதற்கு பின், கோட்டைமேடு, உக்கடம், சத்தியமங்கலம் வனப் பகுதி, குன்னூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு அவர்களை அழைத்துச் சென்று, விசாரிக்க NIA அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.