சென்னை மெரினாவில் பேனா நினைவு சின்னத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு
முன்னாள் முதல்வரும் திமுக கட்சி தலைவருமான கருணாநிதிக்கு சென்னை மெரினா கடற்கரை பகுதியில் நினைவு மண்டபம் ஏற்கனவே கட்டப்பட்டு வரும் நிலையில், கடலுக்குள் பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கான பணிகளையும் திமுக அரசு செய்து வருகிறது. இதற்கு ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்து பசுமை தீர்ப்பாயத்தில் அளிக்கப்பட்ட புகாரின் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டபடி அந்தந்த துறை சார்பில் பதில் மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டு வருகிறது. எனினும் ஒரு பக்கம், இந்த பேனா நினைவு சின்னம் சுற்றுசூழலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில், சுனாமி, புயல் நிலநடுக்கம் போன்ற பேரிடர்களை முன்கூட்டியே கண்டறியும் கருவிகள் பொருத்தப்பட்டு அமையவுள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கிறது.
நினைவு சின்னத்தை கடலில் அமைப்பதால் கடல் வளம் மற்றும் சூழல் பாதிப்பிற்குள்ளாகும்
இந்நிலையில் மெரினா கடற்கரையில் பேனா நினைவு சின்னம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மீனவர்கள் தாக்கல் செய்துள்ள இந்த மனுவில், பேனா நினைவு சின்னத்தால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதோடு, கடல் வளமும் பாதிக்கப்படும். இதனை அறிந்தும் பொதுப்பணித்துறை இந்த திட்டத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது. பலர் இதற்கு ஆட்சேபனை தெரிவித்தும் தமிழ்நாடு அரசு எதனையும் கருத்தில் கொள்ளவில்லை என்று கூறியுள்ளனர். மேலும் அந்த மனுவில், சென்னையில் நினைவிடங்கள் அமைக்க பல்வேறு இடங்கள் உள்ளது. அப்படியிருந்தும் கடலில் அமைப்பதால் கடல் வளம் மற்றும் சூழல் பாதிப்பிற்குள்ளாகும் என்று குறிப்பிட்டுள்ளார்கள். எனவே இந்த நினைவு சின்னத்தை வேறு இடத்தில் அமைக்க உத்தரவிட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.