பேனா நினைவு சின்னம் அமைப்பது குறித்து பசுமை தீர்ப்பாயத்தில் பொதுப்பணித்துறை மனு தாக்கல்
முன்னாள் முதல்வரும் திமுக கட்சி தலைவருமான கருணாநிதிக்கு சென்னை மெரினா கடற்கரை பகுதியில் நினைவு மண்டபம் ஏற்கனவே கட்டப்பட்டு வரும் நிலையில், கடலுக்குள் பேனா நினைவுச்சின்னம் அமைப்பதற்கான பணிகளையும் திமுக அரசு செய்து வருகிறது. இதற்கு தடைவிதிக்க கோரி பசுமை தீர்ப்பாயத்தில் மனு அளிக்கப்பட்ட நிலையில், 'அனைத்து ஒப்புதல்களும் பெற்ற பிறகே கருணாநிதி நினைவிடத்தில் பேனா சின்னம் நிறுவப்படும்' என்று தமிழக அரசு சார்பில் நேற்று(பிப்.,3) பதில் மனு அளிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது பொதுப்பணித்துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், பேனா நினைவு சின்னம் கடற்கரை ஒழுங்கு மண்டலத்தின் அனுமதிக்காக 2022ம்ஆண்டு ஏப்ரல் மாதம் விண்ணப்பிக்கப்பட்டது. இதனையடுத்து தமிழ்நாடு கடற்கரை மண்டல மேலாண்மை ஆணையத்துக்கு பரிந்துரைக்கப்பட்டது என்று கூறப்பட்டுள்ளது.
தேசிய கடற்கரை மண்டல மேலாண்மை ஆணையத்தின் பரிந்துரைக்கபட்டது-பொதுப்பணித்துறை
இதனையடுத்து தேசிய கடற்கரை மண்டல மேலாண்மை ஆணையத்தின் பரிந்துரைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 2022 ஆகஸ்டில் இத்திட்டம் குறித்து வல்லுநர் குழுக்கூட்டம் நடத்தப்பட்டது. தொடர்ந்து, தேசிய கடற்கரை மண்டல மேலாண்மை ஆணையம் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்த பரிந்துரைக்கப்பட்டது. அதன் பின்னர் டிசம்பர் 29ம் தேதி கருத்துகேட்பு கூட்டம் குறித்த அறிவிப்பினை வெளியிட மாசு கட்டுப்பாட்டு வாரியம் கூறியுள்ளதாக தெரிகிறது. பின்னர் தான் இதுகுறித்த அறிவிப்பு டிசம்பர் 31ம்தேதி நாளிதழ்களில் வெளியானது என்றும், ஜனவரி 31ம்தேதி இந்த கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டம் அனைத்துவிதமான அனுமதிகளை பெற்ற பின்னரே அதன் பணிகள் தொடரப்படும் என்றும் அந்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.