ஜெயலலிதா சொத்தில் பங்குகேட்டு கர்நாடக முதியவர் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு ஏற்பு
தமிழகத்தின் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அதிகாரப்பூர்வ வாரிசுகள் அவரது அண்ணன் மகள் ஜெ.தீபா மற்றும் ஜெ.தீபக் தான் என சென்னைஉயர்நீதிமன்றம் தீர்ப்பினை வழங்கியது. இந்த தீர்ப்பு வெளியாகி 2ஆண்டுகளான நிலையில், ஜெயலலிதாவின் அண்ணன் என்று கூறிக்கொண்டு கர்நாடக மாநிலத்தை சேர்ந்த என்.ஜி.வாசுதேவன்(83)என்பவர் ஜெயலலிதாவின் சொத்தில் தனது 50%பங்கு அளிக்கவேண்டும் என்றுக்கூறி வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் அவர், என் தந்தை ஜெயராமுக்கு 2மனைவிகள், முதல் மனைவிக்கு ஜெ.ஜெயம்மாவுக்கு நான் ஒரே மகன். 2ம் மனைவி வேதவல்லி என்னும் வேதாம்மாவுக்கு பிறந்தவர்கள்தான் ஜெயலலிதா, ஜெயக்குமார். ஜெயக்குமார் முன்னதாகவே இறந்துவிட்டதால் நான் தான் ஜெயலலிதாவிற்கு நேரடி அண்ணன் ஆவேன். எனவே, அவரது சொத்தில் 50%த்தை எனக்கு அளிக்க ஜெ.தீபா மற்றும் ஜெ.தீபக் ஆகியோருக்கு உத்தரவிடவேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.
எதிர் மனுதாரர்கள் பதில் மனுக்களை தாக்கல் செய்யவில்லை
இந்த வழக்கு தாமதமாக தாக்கல் செய்யப்பட்டதால் இதனை ஏற்பது குறித்து ஆலோசித்த உயர்நீதிமன்றம் இந்த வழக்கினை மாஸ்டர் கோர்டிற்கு மாற்றியது. இதனையடுத்து இந்த கால தாமதமான வழக்கினை விசாரணைக்கு ஏற்கலாமா? வேண்டாமா? என்று மாஸ்டர் கோர்ட்டு ஜெ.தீபா மற்றும் ஜெ.தீபக் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆனால் அவர்கள் இருவருமே பதில் மனுக்களை தாக்கல் செய்யவில்லை. இந்நிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெ.தீபா சார்பில் அவரது வழக்கறிஞர் ஆஜாரனார். ஆனால் எதிர்மனுதாரர்கள் இருவருமே பதில் மனுக்களை தாக்கல் செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கர்நாடக முதியவர் தொடர்ந்த வழக்கினை விசாரணைக்கு ஏற்றுக்கொள்வதாக மாஸ்டர் கோர்ட் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.