தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் குறித்து அவதூறாக பேசியதற்காக எம்பி மஹுவா மொய்த்ரா மீது வழக்கு
தேசிய மகளிர் ஆணையத்தின் (NCW) தலைவர் ரேகா ஷர்மாவை அவமதிக்கும் வகையில் பேசியதாக திரிணாமுல் காங்கிரஸ் (டிஎம்சி) எம்பி மஹுவா மொய்த்ரா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மகளிர் ஆணையம் டெல்லி போலீசில் கடந்த வெள்ளிக்கிழமை புகார் அளித்ததையடுத்து, இந்த விவகாரத்தில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. டெல்லி போலீஸ் சிறப்புப் பிரிவின் உளவுத்துறை இணைவு மற்றும் வியூக செயல்பாடுகள்(IFSO) பிரிவு இனி ரேகா ஷர்மாவுக்கு எதிராக பேசப்பட்ட இழிவான வார்த்தைகள் குறித்த ஆதாரங்களை சேகரிக்கும். அதன்பிறகு, இந்த விவகாரம் தொடர்பாக மேலும் விசாரணை நடத்தப்படும் என்று போலீஸார் தெரிவித்தனர்.
எதனால் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது?
கடந்த வியாழன் அன்று, ஹத்ராஸ் கூட்ட நெரிசல் நடந்த இடத்திற்கு ரேகா ஷர்மா வந்ததைக் காட்டும் வீடியோவில் மொய்த்ரா கருத்து தெரிவித்திருந்தார். அந்த வீடியோவில் ஒரு நபர் ரேகா ஷர்மாவுக்கு குடையைப் பிடித்துக்கொண்டு அவருக்கு பின்னால் நடப்பதைக் காட்டியது. இந்நிலையில், ரேகா ஷர்மா தனது சொந்தக் குடையை ஏன் எடுத்துச் செல்லவில்லை என்று ஒரு சமூக ஊடகப் பயனர் கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு பதிலளித்த மஹுவா மொய்த்ரா, "அவர் (ரேகா ஷர்மா) தனது முதலாளியின் பாவாடையை தூக்கி பிடிப்பதில் மிகவும் பிஸியாக இருக்கிறார்" என்று கூறியிருந்தார்.