கொள்ளிடம் ஆற்றின் பாலத்தில் கார் கவிழ்ந்து விழுந்த விபத்தில் தம்பதி பரிதாப பலி
திருச்சி கொள்ளிடம் ஆற்றுப்பாலத்தின் மீது சென்று கொண்டிருந்த கார் கவிழ்ந்து விழுந்த விபத்தில் ஓர் தம்பதி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி-சென்னை நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது கொள்ளிடம் ஆற்றுப்பாலம். இந்நிலையில் இந்த ஆற்றுப்பாலத்தின் மீது சென்று கொண்டிருந்த கார் திடீரென ஓட்டுநர் கட்டுப்பாட்டினை இழந்த நிலையில், தடுப்பு சுவரினை இடித்து கொண்டு ஆற்றுக்குள் கவிழ்ந்துள்ளது. இந்த விபத்தானது திருச்சி ஸ்ரீரங்கம் சமயபுரம் சுங்கச்சாவடியை இணைக்கும் கொள்ளிடம் ஆற்று பாலத்தின் பகுதியில் இன்று(டிச.,8) காலை நிகழ்ந்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கிறது. இதில் காரில் பயணம் செய்த கேரளா மாநிலம் எர்ணாகுளத்தினை சேர்ந்த தம்பதியினர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
விபத்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை
சுமார் 50 அடி உயரத்தில் இருந்து கீழே கவிழ்ந்து விழுந்த காரணத்தினால் கார் முழுவதுமாக சேதம் அடைந்துள்ளது என்று தெரிகிறது. இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்த தம்பதியினர் திருச்சியில் இருந்து சென்னை நோக்கி வந்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து அப்பகுதி மக்கள் தகவல் அளித்ததன் பேரில், சம்பவயிடத்திற்கு காவல்துறை, தீயணைப்பு துறை உள்ளிட்டோர் விரைந்து வந்து உடல்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அதன்படி அந்த தம்பதியினர் உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்துள்ளனர். இதனை தொடர்ந்து விபத்தில் சிக்கிய காரையும் ஆற்றிலிருந்து மீட்டெடுத்துள்ளனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் தங்கள் விசாரணையினை துவங்கியுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கிறது.