'கேப்டன் விஜயகாந்த் எனும் உற்ற நண்பன்': புதிய வலைப்பதிவை வெளியிட்டார் பிரதமர் மோடி
டிசம்பர் 28ஆம் தேதி உயிரிழந்த நடிகரும் அரசியல்வாதியுமான கேப்டன் விஜயகாந்தின் மறைவுக்கு பிரதமர் மோடி இன்று ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் பிரதமர் மோடி, "விஜயகாந்த் ஜியின் மறைவினால், மிகவும் போற்றப்படும் நட்சத்திரத்தை பலர் இழந்துள்ளனர். மேலும் பலர் தங்கள் அன்புக்குரிய தலைவரை இழந்துள்ளனர். ஆனால் நான் ஒரு அன்பான நண்பரை இழந்துவிட்டேன்." என்று கூறியுள்ளார். மேலும், விஜய்காந்த் குறித்த ஒரு வலைப்பதிவையும் பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார். அந்த வலைப்பதிவில், "மற்றவர்களின் முன்னேற்றத்திற்காக தனது வாழ்க்கையை வாழ்ந்த ஒரு நபர் விஜயகாந்த் ஆவார். தனிப்பட்ட முறையில், கேப்டன் மிகவும் அன்பான நண்பராக எனக்கு இருந்தார். பல சந்தர்ப்பங்களில் அவரோடு நான் நெருக்கமாக பழகி பணிபுரிந்திருக்கிறேன்." என்று பிரதமர் கூறியுள்ளார்.
மேலும் பிரதமர் மோடியின் வலைப்பதிவில் குறிப்பிடப்பட்டிருக்கும் முக்கிய வரிகள்:
இந்திய சினிமா உலகில், விஜயகாந்த் ஜியைப் போல் ஒரு சில நட்சத்திரங்கள் மட்டுமே அழியாத முத்திரையை பதித்துள்ளனர். கேப்டன் நடித்த கதாபாத்திரங்களும் அவற்றை அவர் நடித்த விதமும் சாதாரண குடிமகனின் போராட்டங்கள் பற்றிய அவரது ஆழமான புரிதலை எடுத்துக்காட்டுகிறது. 2014 மக்களவைத் தேர்தலில் எங்கள் கட்சிகள் கூட்டணியில் போட்டியிட்டு 18.5% வாக்குகளைப் பெற்றபோது, நான் கேப்டனுடன் இணைந்து பணியாற்றினேன். 1989 தேர்தலுக்குப் பிறகு எந்த ஒரு முக்கிய அரசியல் கூட்டணியும் வெல்லாத அளவு வாக்குகளை நாங்கள் அப்போது வென்றோம். 2014 தேர்தல் வெற்றிக்குப் பிறகு NDA தலைவர்கள் சந்தித்தபோது சென்ட்ரல் ஹாலில் அவர் அடைந்த மகிழ்ச்சியை என்னால் மறக்கவே முடியாது.