திருமண சமத்துவம்: இந்த இக்கட்டான நிலையை உச்சநீதிமன்றத்தால் தீர்க்க முடியுமா?
ஒரே பாலின திருமணங்களுக்கு ஆதரவாகவும் எதிராகவும் வாதிடும் மனுக்களை இந்திய உச்ச நீதிமன்றம் தற்போது விசாரித்து வருகிறது. எதிர்பாலின(Heterosexuals) தம்பதிகளுக்கு வழங்கப்படும் அதே அங்கீகாரம் பால்புதுமையினருக்கும்(LGBTQ+) வழங்கப்படுமா? இதற்கு ஆதரவாக பேசிய மனுதாரர்கள், திருமணம் செய்து கொள்வது எங்களது அடிப்படை உரிமை என்று உச்ச நீதிமன்றத்தில் வாதிட்டனர். மேலும், சிறப்பு திருமண சட்டத்தில் 'ஆண்', 'பெண்' என்று இருக்கும் வார்த்தைகளை நீக்கிவிட்டு 'நபர்' என்ற வார்த்தைகளை சேர்க்குமாறு அவர்கள் கோரினர். இதற்கு எதிராக மத்திய அரசு சார்பில் பேசிய சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இது போன்ற சட்டங்களை நாடாளுமன்றம் தான் இயற்ற வேண்டும் என்று கூறினார்.
தற்போது வரை நீதிமன்றத்தில் என்ன விவாதிக்கப்பட்டது
மேலும், "துத்தநாகம்(zinc) மற்றும் வெண்கலம் இரண்டுமே உலோகங்கள் தான், ஆனால் அவை இரண்டுக்கும் சமமான உரிமைகளை வழங்க முடியுமா?" என்று கேள்வி எழுப்பினார். "அவர்கள் சேர்ந்து வாழ கூடாது என்று நாங்கள் கூறவில்லை. ஆனால், அவர்களுக்கு திருமண அங்கீகாரம் வழங்கக்கூடாது" என்றும் அவர் கூறியுள்ளார். முதலில், இந்த பிரச்சனை சிறப்பு திருமண சட்டத்திற்கு(மதசார்பற்ற திருமண சட்டம்) கீழ் மட்டுமே அணுகப்படும் என்று நீதிபதிகள் கூறி இருந்தனர். ஆனால், மனுதாரர்களின் வாதத்தை கேட்டதற்கு பிறகு, தனிப்பட்ட திருமண சட்டங்களுக்குள் செல்லாமல் இந்த பிரச்சனையை தீர்க்க முடியாது என்ற முடிவுக்கு நீதிபதிகள் வந்தனர். மேலும், திருமணத்தை அங்கீகரிக்க முடியாது என்றால், அவர்களுக்கான சமூக உரிமைகள் எப்படி வழங்கப்படும் என்ற கேள்வியையும் நீதிபதிகள் எழுப்பியுள்ளனர்.